சாலைகளில் தேங்கும் மழை நீர் அரை மணி நேரத்திற்குள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.!அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.!

0
Follow on Google News

மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பின் செய்தியளர்களிடம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-மதுரையில் நடைபெற்ற புரட்சித்தலைவர் நூற்றாண்டு விழாவில் மதுரையில் 30 கோடி ரூபாய் செலவில் ஆட்சியர் அலுவலக கட்டடம் கட்டப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

அதனை தொடர்ந்து இந்த கட்டட பணிக்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தங்களது திருக்கரங்களால் அடிக்கல் நாட்டினர். தற்பொழுது இந்த பணி முடியும் தருவாயில் உள்ளது. வடகிழக்கு பருவமழையை நாம் எப்படி கையாள வேண்டும் என்று முதலமைச்சர் தலைமையில் ஒரு விரிவான ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த வடகிழக்கு பருவ மழையின்போது உயிர் சேதமும், பொருட் சேதமும் ஏற்படக்கூடாது என்று முதலமைச்சர் பல்வேறு அறிவுரைகளை அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் வழங்கியுள்ளார்.

முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் மூலம் வடகிழக்கு பருவமழையால் கிடைக்கும் மழை நீரை வீணாக்காமல் சேமிக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கூட மதுரை மாநகராட்சியில் உள்ள 33 ஊரணிகளில் 11 ஊரணிகள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. 16 ஊரணிகளில் பணிகள் நடைபெற்று வருகிறது. மாரியம்மன் தெப்பக்குளம், தல்லாகுளம் தெப்பக்குளம், டவுன்ஹால் ரோடு பெருமாள்தெப்பக்குளம் ஆகிய குளங்களில் நீரை சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சியில் சாலைகளில் மழைநீர் தேங்கும் 280 இடங்கள் கண்டறியப்பட்டு மழைநீர் தேங்காமல் இருக்க வழிந்தோடும் வகையில் மழைநீர் உள்கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 27 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு அதற்குரிய மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற கடந்த ஆட்சிக்காலத்தில் 8 மணி நேரம் ஆனது. ஆனால் தற்போது அப்படியில்லை. அரை மணி நேரத்திற்குள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. மணிமுத்தாறு, பேச்சிப்பாறை மற்றும் கிருஷ்ணகிரி அணைகளில் கடந்த ஆண்டை விட நீர் இருப்பு அதிகமாக உள்ளது.

மேலும் மேட்டூர் பவானிசாகர், அமராவதி, பெருஞ்சாணி, சோலையாறு, ஆழியாறு, திருமூர்த்தி அணை மற்றும் சாத்தனூர் அணையில் நீர் இருப்பு கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது. பருவமழை காலங்களில் கிடைக்கும் மழை நீரை நீர்நிலைகளில் சேமிக்க முதலமைச்சர் உத்தரவு படி அனைத்து மாவட்ட நிர்வாகமும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.