காலையில் நீதிமன்றத்தில் தொடங்கிய பரபரப்பு… விஜய் ஆஜராக வேண்டும் என்ற சங்கீதா தரப்பின் வலியுறுத்தல்… அதன்பிறகு பிற்பகல் வரை நீடித்த எதிர்பார்ப்பு… இறுதியில் வெறும் 15 நிமிடங்களில் சங்கீதா எடுத்த அதிரடி முடிவு என, இந்த வழக்கில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன. குறிப்பாக, விவாகரத்து வழக்கை சங்கீதா திடீரென வாபஸ் பெற்றது ஏன்?
கடைசி நிமிடத்தில் அப்படி என்ன நடந்தது? என்பதுதான் தற்போது எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. காலை சுமார் 11 மணியளவில் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரரான சங்கீதா லண்டனில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நீதிபதி முன்பு ஆஜரானார். ஆனால், எதிர்மனுதாரரான விஜய் அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதையடுத்து சங்கீதா தரப்பு வழக்கறிஞர்கள், “வழக்கில் எதிர்மனுதாரராக இருக்கும் விஜய்யும் நேரிலோ அல்லது காணொலி வாயிலாகவோ ஆஜராக வேண்டும்” என்று நீதிமன்றத்தில் வலியுறுத்தினர். வழக்கு விசாரணை தொடங்கிய உடனேயே இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்புக்கும் இடையே காரசாரமான வாதங்கள் எழுந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு விஜய் தரப்பு மூத்த வழக்கறிஞர் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது முக்கியமான கட்டத்தில் நடைபெற்று வருவதால், முதலமைச்சர் என்ற முறையில் விஜய் பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், அதனால் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், வழக்கு விசாரணையை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், சங்கீதா தரப்பு இதற்கு சம்மதிக்கவில்லை. தொடர்ந்து காரணங்கள் கூறப்பட்டு வழக்கு தள்ளிப்போகிறது என்றும், இன்று இந்த வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல், விஜய்யையும் உடனடியாக காணொலி வாயிலாக ஆஜராக உத்தரவிட வேண்டும் என்றும் சங்கீதா தரப்பு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார். இதற்கிடையே, சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றுக் கொண்டிருந்த விஜய், பேரவை வளாகத்தை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகின. அவர் நீதிமன்ற விசாரணைக்காக செல்கிறாரா? வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக செல்கிறாரா? அல்லது வேறு அரசு பணி காரணமாக செல்கிறாரா? என்ற கேள்விகள் எழுந்தன.
இப்படிப்பட்ட சூழலில்தான் பிற்பகல் 2 மணிக்கு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. லண்டனில் இருந்து சங்கீதா மீண்டும் காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் இணைந்தார். நீதிபதி சுஜாதா முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அப்போது சுமார் 15 நிமிடங்கள் சங்கீதா தனது தரப்பு கருத்துகளையும், தனது நிலைப்பாட்டையும் நீதிபதியிடம் விரிவாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதாவது, தான் ஏற்கனவே தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை முழுமையாக திரும்பப் பெற்றுக்கொள்வதாக சங்கீதா நீதிமன்றத்தில் தெரிவித்தார். காலையில் விஜய் ஆஜராக வேண்டும் என்று சங்கீதா தரப்பு வலியுறுத்திய நிலையில், பிற்பகலில் அதே விவாகரத்து மனுவையே வாபஸ் பெறுவதாக சங்கீதா அறிவித்தது… இந்த வழக்கில் எதிர்பாராத திருப்பமாக அமைந்தது.
காலையில் இவ்வளவு பரபரப்பாக தொடங்கிய இந்த விவாகரத்து விவகாரம்… பிற்பகலில் திடீரென வாபஸ் பெறப்பட்டதற்கு காரணம் என்ன? கடைசி சில மணி நேரங்களில் இருதரப்புக்கும் இடையே என்ன நடந்தது? என்கிற கேள்விக்கு விடை இல்லை என்றாலும் கூட, விஜய்–சங்கீதா விவாகரத்து விவகாரம் நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்திருப்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

