நடிகர் விஜய்யின் மகனும், தற்போது இயக்குநராக அறிமுகமாகியுள்ள ஜேசன் சஞ்சய், தனது சிறுவயது நினைவுகள், தந்தை விஜய் மற்றும் தாய் சங்கீதா குறித்து பகிர்ந்துள்ள சுவாரஸ்ய தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பொதுவாக, விஜய்யின் மகன் என்பதால் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாகுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், அந்த எதிர்பார்ப்பை மாற்றி, தனது தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகர் போல இயக்குநர் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவர் இயக்கியுள்ள முதல் திரைப்படம் “சிக்மா”. இந்தப் படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனத்துடன் இணைந்து உருவாகியுள்ள இந்த திரைப்படம், முதலில் ஜூலை 31-ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், பின்னர் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டது.

இந்த நிலையில், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது குடும்ப வாழ்க்கை குறித்த பல சுவாரஸ்ய அனுபவங்களை ஜேசன் சஞ்சய் பகிர்ந்துள்ளார். அதில், சிறுவயதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளை தனது தந்தை விஜய்யின் தோளில் அமர்ந்து பார்த்தது மறக்க முடியாத நினைவு என்று அவர் கூறியுள்ளார்.
அந்த தருணங்கள் தனது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான அனுபவங்களாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல், தனது தாய் சங்கீதா குறித்து பேசிய ஜேசன் சஞ்சய், சிரித்தபடியே ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்துள்ளார். “என் அம்மா ஒரு உளவுத்துறை அதிகாரி மாதிரி. நான் என்ன செய்தாலும் கண்டுபிடித்துவிடுவார்.
அவரை ஏமாற்றிவிட்டு எங்காவது வெளியே போக முயற்சித்தாலும், இறுதியில் கண்டிப்பாக மாட்டிக்கொள்வேன்” என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.அதோடு, ஒரு நாள் வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு யாரிடமும் சொல்லாமல் காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றதாகவும், யாரும் தொடர்புகொள்ள முடியாதபடி தனது செல்போனையும் அணைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால், வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் பதற்றமடைந்து, தன்னை எங்கும் காணவில்லை என்பதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே தயாராகிவிட்டதாகவும் அவர் கூறினார். ஆனால், மறுநாள் காலை வீட்டிற்கு திரும்பியபோது, குடும்பத்தினர் அனைவரிடமிருந்தும் கடுமையான திட்டுகளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது என்றும் ஜேசன் சஞ்சய் பகிர்ந்துள்ளார்.
இந்த பேட்டியில், தந்தை விஜய் மீதான பாசம், தாய் சங்கீதாவின் கண்டிப்பு மற்றும் குடும்பத்துடன் இருந்த இனிய நினைவுகள் குறித்து ஜேசன் சஞ்சய் பேசிய விதம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. குறிப்பாக, ஒரு பிரபல நடிகரின் மகன் என்ற அடையாளத்தைத் தாண்டி, ஒரு சாதாரண குடும்பத்தில் நடக்கும் அனுபவங்களைப் போலவே தனது வாழ்க்கை சம்பவங்களை அவர் வெளிப்படையாக பகிர்ந்திருப்பது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

