கருணாநிதி உருவப்படம் திறப்பு விழாவில் ராஜாஜிக்கு புகழாரம் சூட்டிய ஜனாதிபதி…

0
Follow on Google News

சென்னை சட்டமன்ற நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தில் இந்தியக் குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் பேசியதாவது. மண்ணின் மிகச்சிறந்த தலைமைகளை சட்டமன்றத்தில் கௌரவிக்கும் பாரம்பரியம் உள்ளது என்பதை அறிவது உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. திருவள்ளுவர், மகாத்மா காந்தி, சி.ராஜகோபாலாச்சாரி, சி.என்.அண்ணாதுரை, கே.காமராஜ், ஈ.வி.ராமசாமி, பி.ஆர்.அம்பேத்கர், யு.முத்துராமலிங்கத் தேவர், முஹம்மது இஸ்மாயில் சாஹிப், எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா, எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி, வ.உ.சிதம்பரம் பிள்ளை, பி.சுப்பராயன் மற்றும் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் போன்ற பல தலைவர்களின் படங்கள் இப்பேரவையில் ஏற்கனவே உள்ளன. இப்போது இந்த புகழ்பெற்ற மண்டபத்தில் தம்முடைய வாழ்நாள் முழுவதையும் மாநிலத்தின் மக்கள் நலனுக்காக அர்ப்பணித்த கருணாநிதியின் உருவப்படமும் இருக்கும்,

நான் இங்கு வந்தபோது, ​​காந்தியடிகளின் மனசாட்சிக் காவலராகத் திகழ்ந்தவரும், சுதந்திரப் போராட்ட வீரர்களில் சிறந்த தலைவருமான சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். குடியரசுத்தலைவர் மாளிகையில் முதலில் இடம் பெற்ற இந்தியர் அவர். அவருடைய வருகை இந்த மதிப்பிற்குரிய அரங்கினையும் அலங்கரித்தது. அவர் சென்னை மாநிலத்தின் முதல் பிரதமர் அல்லது முதல்வர் ஆவார். அவருக்குப் பின் வந்தவர்களும், முன்மாதிரியாகத் திகழ்ந்த அரசியல் தலைவர்கள். இருப்பினும், ராஜாஜிக்கு பின்வந்தவர்களில், கருணாநிதி அவர்கள் தான் நீண்ட காலம் ஆட்சி செய்தார், இதனால் தமிழ்நாட்டில் ஒரு தனி முத்திரை பதித்துச் சென்றார்.

விடுதலை பெற்று 75வது ஆண்டு நிறைவை நாடு கொண்டாடும் போது, ​​இத்தகைய தலைவர்கள் குறித்தே எனது எண்ணங்கள் செல்கின்றன. நமது தேசிய இயக்கம் 1857 அல்லது அதற்கு முன்பே தொடங்கி 1947 வரை நடைபெற்றது. இந்த காலகட்டத்தில், தீவிரவாதிகளும், புரட்சியாளர்களும் இருந்தனர். சமாதானவாதிகளும், அரசியலமைப்புவாதிகளும் இருந்தனர். அவர்கள் வெவ்வேறு முறைகளைக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு வெவ்வேறு தொலை நோக்குப் பார்வைகள் இருந்தன. ஆனால், அவர்கள் தாய்நாட்டின் மீது கொண்ட மதிப்பிலும், மரியாதையிலும் ஒன்றுபட்டிருந்தனர். ஒவ்வொருவரும் அவரவர் வழியில், இந்தியத்தாய்த்திரு நாட்டிற்குச் சேவை செய்ய பாடுபட்டனர். ஒரு ஆற்றில் வெவ்வேறு கிளை நதிகள் ஒன்றிணைவது போல, அவர்கள் அனைவரும் நாட்டு விடுதலைக்காக ஒன்றிணைந்தனர்.

அவர்கள் அனைவரும் காந்திஜியில் ஒரு சங்கமத்தைக் கண்டனர். மகாத்மா காந்தி நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் சிறந்தவைகள் அனைத்தின் ஆளுமையாகவும் திகழ்ந்தார். அது மட்டுமல்லாமல், பல மேற்கத்திய சிந்தனையாளர்களின் கருத்துக்களையும் மேம்படுத்தினார். அவருடன் தேசபக்தர்கள் – வழக்கறிஞர்கள், அறிஞர்கள், சமூக சீர்திருத்தவாதிகள், மத, ஆன்மீகத் தலைவர்கள் மற்றும் பலர் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஈடு இணையற்றவர்கள். டாக்டர் பி ஆர் அம்பேத்கரைப் பற்றி சிந்தியுங்கள். எத்துணை உயர்ந்த மேதை!! எத்தகைய தொலைநோக்கு! ஆனால் வரலாற்றுப் புத்தகங்களில் எழுதப்பட்ட ஒவ்வொரு பெயருடனும், எண்ணற்ற மற்றவர்கள் பெயர்கள் பதிவு செய்யப்படவில்லை. அவர்கள் ஒரு சுதந்திர நாட்டில் வாழ்வதற்காக தங்கள் வசதிகளை, தொழில்களை, சில சமயங்களில் தங்கள் உயிரையே தியாகம் செய்தனர்.

அந்த சில பத்தாண்டுகள், பூமி இதுவரை கண்டிராத மிகச்சிறந்த தலைமுறைகளை உருவாக்கியது என்று நான் நம்புகிறேன். அவர்களுக்கு, இந்த நாடு எப்போதும் கடன்பட்டிருக்கும். அவர்களுக்கு, நாம் செலுத்தக்கூடிய ஒரே அஞ்சலி, அவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் இலட்சியங்களால் தொடர்ந்து ஊக்கம் பெறுவதாகும். அவர்கள் நமக்கு விடுதலையைப் பரிசளித்தனர். ஆனால், அவர்கள் நமக்கு, பொறுப்பையும் கொடுத்தார்கள். அவர்களின் தொலை நோக்குப்பார்வை வடிவம் பெறுகிறது, ஆனால், அது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்கை ஆற்றியது போல், நாட்டை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்வதில் நாம் ஒவ்வொருவரும் நம் பங்கை ஆற்ற வேண்டும்.

நிகழ்காலத்தையும், எதிர்கால முன்னேற்றத்தையும் புரிந்துகொள்ள, கடந்த காலத்துடன் தொடர்ந்து ஈடுபடுமாறு நான் இளைஞர்களைக் கேட்டுக்கொள்கிறேன். மகாத்மா காந்தி, சுப்பிரமணிய பாரதி மற்றும் பிறரின் வாழ்க்கையில், உங்கள் மனதில் எழும் கேள்விகளுக்கான பதில்களைக் காண்பீர்கள். நமது சமீபத்திய வரலாற்றில் இளம் தலைமுறையினர் அதிக ஆர்வம் காட்டுவதை நான் காண்கிறேன். தெரிந்த மற்றும் தெரியாத விடுதலைப் போராட்ட வீரர்களுடன் தொடங்கிய பணிகள் தொடரும் என்ற நம்பிக்கையை அவர்கள் எனக்கு அளிக்கிறார்கள். இந்த நூற்றாண்டில் இந்தியா தனது ஞானத்தால் உலகிற்கு வழி காட்டும் என குடியரசு தலைவர் பேசினார்.