மதுரையின் திமுக முகம் என தன்னை காட்டி கொண்டு, மதுரை ஒட்டு மொத்த திமுகவையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து இருந்த முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் தோல்வி என்பது திமுகவினரை அதிர்ச்சிக்கு உள்ளாகியது என்றாலும் கூட மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக மூர்த்திக்கு எதிராக போட்டியிட அதிமுக மற்றும் அதன் கூட்டணி காட்சிகளே தயங்கி நின்றது.
இப்படி ஒரு சூழலில் தனக்கு மதுரை கிழக்கு தொகுதி தான் வேண்டும் என தவெக விடம் பெற்று அங்கே போட்டியிட்டு முன்னாள் அமைச்சர் மூர்த்தியை வீழ்த்தி வெற்றி வகை சூடி இருக்கும் யார் இந்த கார்த்திகேயன்.? இவருக்கும் முன்னாள் அமைச்சருக்கும் இருந்த அரசியல் பகை என்ன.? எப்படி அமைச்சர் மூர்த்தியை சவால் விட்டு வீழ்த்தி வெற்றி பெற்றார் என்பதை முழுமையாக பார்க்கலாம்.

கடந்த 2006 முதல் 2011 திமுக ஆட்சி காலத்தில் முக அழகிரியின் ஆதரவாளராக அறியப்பட்ட தற்பொழுது தவெக சார்பில் வெற்றி பெற்ற கார்த்திகேயன் அவனியாபுரம் திமுக சேர்மனாக இருந்தவர், அந்த காலகட்டத்தில் மதுரை அரசியலில் முக ஸ்டாலின் ஆதரவாளர் – முக அழகிரி ஆதரவாளர் என இரண்டு தரப்புகள் இருந்தன இதில் முக ஸ்டாலின் ஆதரவாளராக மூர்த்தியும், அழகிரி ஆதரவாளராக கார்த்திகேயன், பி எம் மன்னன், எஸ் ஆர் கோபி, கோ தளபதி, என்று பலரும் இருந்தன.
இந்நிலையில் 2011 க்கு பின்பு திமுகவில் இருந்து முக அழகிரி ஓரம் கட்டப்பட்ட பின்பு மூர்த்தியின் கை மதுரை திமுகவில் ஓங்க தொடங்கியது, அப்போது பேர் , புகழ் , செல்வாக்கு மிக்க தலைவர்களை வளரவிட்டால் மதுரையில் நாம் அரசியல் செய்ய முடியாது என்கிற தோரணையில், அதுவரை திமுகவில் கோலோச்சி நின்ற பலரும் திமுகவில் இருந்து படி படியாக மூர்த்தியால் ஓரம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் முக அழகிரிக்கு விசுவாசமாக கார்த்திகேயன் உட்பட பலரும் இருந்தாலும் கூட முக அழகிரி திமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்ட பின்பும் கூட தொடர்ந்து திமுகவில் தங்கள் பணிகளை செய்து வந்தனர், இருந்தாலும் அவர்களுக்கான அங்கீகாரத்தை திமுக தலைமையிடம் இருந்து பெற்று விடாமல் மூர்த்தி தடையாக இருந்தார் என்கிற குற்றசாட்டும் உள்ளது.
இப்படி ஒரு சூழலில் சுமார் 15 வருடங்களாக தொடர்ந்து கார்த்திகேயன் போன்ற திமுகவினர் புறக்கணிக்க பட்டு வந்த நிலையில், இதற்கு மேலும் தன்மானத்தை விட்டு திமுகவில் பயணிக்க முடியாது என்கிற முடிவுக்கு வந்து, தங்கள் பலம் என்ன என்பதை காண்பிக்கிறோம் என்கிற முடிவில் தவெகவில் தங்களை இணைத்து கொண்டார் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளரும், அவனியாபுரம் முன்னாள் திமுக சேர்மனுமான கார்த்திகேயன்.
இந்நிலையில் தவெக வில் இணைந்த கார்த்திகேயன், தன்னுடைய அரசியலுக்கு முட்டுக்கட்டையாக இருந்த முன்னாள் அமைச்சர் மூர்த்தி போட்டியிடும் மதுரை கிழக்கு தொகுதியில் சீட் வாங்கி, தன்னை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த துடித்த மூர்த்தியை வீழ்த்தி தன்னுடைய புதிய அரசியல் அத்தியத்தை தொடங்கு கிறேன் என சவால் விட்டு மதுரை கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழக வேட்பாளராக களம் இறங்கினார் கார்த்திகேயன்.
இறுதியில் மூர்த்தியை யாராலும் வீழ்த்தவே முடியாது என்கிற மாயயை உடைத்து, மதுரை கிழக்கு தொகுதியில் மூர்த்தியை வீழ்த்தி, தன்னுடைய அரசியல் பகையை தீர்த்தது மட்டுமில்லாமல், தன்னுடைய புதிய அரசியல் அத்தியதத்தை தொடங்கி இருக்கும் கார்த்திகேயன், நன்கு அரசியல் அனுபவமிக்க ஒருவர், அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர்களில் கார்த்திகேயன் போன்ற அரசியலை நன்கு கற்று தேர்த்தவர்களும் உள்ளனர் என்கிறது தவெக வட்டாரங்கள்.

