அமைச்சர் தங்கம் தென்னரசை பாஜக பொதுச் செயலாளர் நேரில் சந்தித்து இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தார்.!

0
Follow on Google News

தமிழக தொழில் வளர்ச்சித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், திரு தங்கம் தென்னரசு அவர்களை பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் நேரில் சந்தித்து இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார், இது குறித்து பேராசிரியர் தெரிவித்ததாவது, (1) விருதுநகர் மாவட்டம் #திருச்சுழி சட்டமன்ற பகுதியில், மத்திய அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருக்கிற “#ஜவுளி_பூங்கா”, ரூபாய் 200 கோடி முதலீட்டில் அமைய இருக்கிறது. அந்த பூங்கா அங்கு அமையும் போது, அது 1000 கோடி ரூபாய்க்கான வர்த்தகத்தை உருவாக்கும், 2000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கொடுக்கும்; மறைமுக வேலை வாய்ப்பிலும் பல்லாயிரம் பேர் பயன் பெறுவார்கள்.

ஆனால் சுற்றுச்சூழல் சந்தேகங்களை மனதில் வைத்து, அந்த கிராமத்து மக்கள், இதைப்பற்றிய சந்தேகத்தில் இருந்தார்கள். அமைச்சர் அவர்களிடம் இதைப் பற்றி விளக்கிச் சொல்லி, இது ஒரு “ZERO DISCHARGE PROJECT”, சுற்றுச்சூழலுக்கு எந்த விதமான பாதிப்பும் வராது, என்பதை விரிவாக எடுத்துச் சொல்லி, அது சம்பந்தமான முதலீட்டாளர்களுக்கும், அமைச்சருக்கும் ஒரு கலந்துரையாடலுக்கு நானே ஏற்பாடு செய்வதாகவும் அமைச்சரிடம் கூறினேன்.

இதை அமைச்சரது காலத்தில், அவரே இந்த பகுதி மக்களுக்கான தனது பங்களிப்பாக இதைச் செய்ய வேண்டும்; இதில் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் வராது என்பது அமைச்சர் சம்பந்தப்பட்டவர்கள் பேசி உறுதி செய்து கொள்ளலாம் என்று கோரிக்கை வைத்தேன். அமைச்சரும் அதைத் திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டார். எனவே விரைவில் அமைச்சரின் முயற்சியில், மத்திய அரசின் ஜவுளி பூங்கா திட்டம் திருச்சுழி சட்டமன்றத்தில் அமையும் என்று நான் நம்புகிறேன்.

(2) தமிழ் வளர்ச்சித் துறையுடைய அமைச்சராகவும் திரு தங்கம் தென்னரசு அவர்கள் இருக்கிறார்; அவர் சிறந்த தமிழ்ப் பற்றாளர். சங்கரதாஸ் சுவாமிகள் போன்ற நிறைய நாடகத் தமிழ் ஆசிரியர்கள் எழுதிய வசனங்கள், உரையாடல்கள் எல்லாம் காலத்தால் அழிந்து கொண்டிருக்கிறது. உடையப்பா அவர்களின் அரிச்சந்திரா நாடகத்தை உதாரணத்துக்குச் சொல்லலாம். இன்னும் நிறைய நாடக ஆசிரியர்கள் இருக்கிறார்கள், வரிசையாகப் பட்டியலிடலாம்.

இவற்றை எல்லாம் நாடகக் கலைஞர்கள் மனப்பாடம் செய்து, தங்களுக்குத் தெரிந்த வரையில் அதைக் காப்பாற்றி வருகிறார்கள். தமிழ் வளர்ச்சித்துறை, அந்த மூல உரையாடல் ஆவணங்களை எல்லாம் தேடி எடுத்து, தமிழ்நாட்டிலே பல நூறு ஆண்டுகளாக நாடகத்துறையில் என்னவெல்லாம் நாடகங்கள் வந்தன, அதற்குரிய கதை வசனத்துடைய மூலம் அவற்றை எல்லாம் தொகுப்புகளாகப் பதிவு செய்து வெளியிட வேண்டும்; இது நாடகத் தமிழுக்கு நாம் செய்கிற பெரிய பங்களிப்பாக இருக்கும் என்று கூறினேன். அதையும் அமைச்சர் பரிசீலிப்பதாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

அதுபோலவே “நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள்” என்ற வரிசையில், நாம் சிறு வயது மாணவனாக இருந்தபோது நிறையப் புத்தகங்கள் வந்திருக்கிறது. அதேபோல “#தமிழ்வளர்த்தசான்றோர்கள்” என்ற பெயரில் புத்தகங்கள் நிறைய வரவேண்டும். அதில் தேசிய இயக்கங்கள், திராவிட இயக்கங்கள், பொதுவுடைமை இயக்கங்கள், எந்த அரசியலும் சாராத தமிழ் படைப்பாளிகள், என்று பாரபட்சம் பார்க்காமல் அத்தனை தமிழறிஞர்களையும் அதில் வரிசைப்படுத்த வேண்டும்.

அதிலும் முதற்கட்டமாக அதிகம் அறியப்படாத தமிழ் வளர்த்த சான்றோர்களை முதல்கட்ட நூல்களாக வெளியிடவேண்டும். அப்படி அதிகம் அறியப்படாத 60 ஆன்றோர்கள் பட்டியலை நான் அமைச்சருக்கு வழங்குவதாகவும் சொன்னேன். அதையும் அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள் முழுமையாகக் கேட்டு, இது ஒரு நல்ல கருத்து, இதையும் நான் பரிசீலிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். ஆகவே அமைச்சர் இதை வெற்றி முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி சார்பாகக் கோரிக்கை வைத்திருக்கிறேன். பொறுமையாகக் கேட்டு இதைப் பரிசீலிப்பதாகச் சொன்ன அமைச்சருக்கு எனது நன்றிகள் என பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.