என்னை திட்டி எழுதினால் பணம் வருகிறது என்றால் திட்டி எழுதிக்கொள்ளுங்கள்.! முக ஸ்டாலின் பெருந்தன்மை பேச்சு.!

0
Follow on Google News

விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த திமுக நிகழ்ச்சி ஒன்றில் முக ஸ்டாலின் பேசுகையில், என்னைச் சந்திக்கும் ஊடகவியலாளர்கள், ”நான் கொடுக்கும் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்ற முடியும்?” என்ற சந்தேகத்தைத் தான் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். அவர்களிடம் நான் சொல்லும் பதில், என்னால் முடியும் என்று சொல்லி வருகிறேன். இந்த ஸ்டாலினால் முடியும் என்று சொல்லி வருகிறேன். கலைஞர் மகன் ஸ்டாலினால் நிச்சயம் முடியும் என்று சொல்லி வருகிறேன்.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. தீர்க்க முடியும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. நிச்சயம் தீர்ப்பேன். என்னை நம்பி நீங்கள் உங்கள் மனுக்களை ஒப்படைத்திருக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கையை நிச்சயம் நான் காப்பாற்றுவேன். இந்த மக்கள் பயணத்தின் மகத்தான வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு சில ஊடகங்கள் இதனைக் குறை சொல்லி எழுதுகின்றன. அதாவது தி.மு.கழகத்தை குறை சொல்லி எழுதுவதன் மூலமாக பழனிசாமியை திருப்திப்படுத்துகின்றன.

ஸ்டாலினை திட்டி எழுதினால் உங்களுக்கு அரசாங்க விளம்பரம் கிடைக்கிறது, பணம் வருகிறது என்றால் திட்டி எழுதிக்கொள்ளுங்கள். அப்போதும் நான் உங்களுக்கு நன்மையைத் தான் செய்கிறேன் என்பதை மறந்துவிடாதீர்கள். ஸ்டாலின் மனு வாங்குகிறார், சில மனுக்களை எடுத்து பேசச் சொல்கிறார், மனுக்களை வாங்கி பெட்டியில் போட்டு பூட்டுகிறார், சீல் வைக்கிறார், சாவியை தனது சட்டைப் பையில் போட்டுக் கொள்கிறார். வழக்கமாக இதுதான் நடக்கிறது என்று ஒரு நாளிதழ் எழுதி இருக்கிறது. இது என்ன மாதிரியான நிகழ்ச்சி என்றே அவர்களது மூளைக்குள் இன்னும் புரியவில்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும்?

அனைத்து தொகுதி மக்களிடமும் மனு வாங்க வேண்டும் என்றால் 234 தொகுதியிலும் அதைத்தானே செய்ய வேண்டும்? வேறு என்ன செய்யச் சொல்கிறது அந்த நாளிதழ்? கல்லூரி பேராசிரியர் வருகிறார், பாடம் நடத்துகிறார், தேர்வு வைக்கிறார், பாஸ் போடுகிறார் – இது எல்லாம் ஒரு கல்லூரியா என்று எழுதினால் மூளை வளர்ச்சி இல்லை என்று எப்படிச் சொல்வோமோ அப்படித்தான் அந்த நாளிதழ் எழுதுகிறது. நீங்கள் விமர்சித்து எழுதுங்கள். எழுதுவதன் மூலமாக நாங்கள் சரியாகச் செயல்படுகிறோம் என்று அர்த்தம் ஏன ஸ்டாலின் பேசினார்.