தி.மு.க.வினருக்கு மட்டுமே நிவாரண டோக்கன் விநியோகம்..தட்டிக்கேட்ட இளைஞர்கள் கைது..!

0
Follow on Google News

கரூரில் தி.மு.க.வினருக்கு மட்டுமே கொரோனா நிதியுதவிக்குரிய டோக்கன்கள் வழங்கப்பட்டதை தட்டிக்கேட்ட பொதுமக்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிதி உதவியாக ரூ.4 ஆயிரத்தை இரண்டு தவணையாக வழங்கிட முதல்வர் ஆணையிட்டு, முதற்கட்ட நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாவது கட்ட நிவாரணம் மற்றும் 13 வகையான கொரோனா நிவாரண பொருட்கள் குடும்ப அட்டைகளுக்கு வழங்கிடவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளின் மூலம் டோக்கன் வழங்கப்படும் நிலையில் கரூர் மாவட்டத்தில் மட்டும், கரூர் மாவட்ட திமுக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி உத்திரவிற்கிணங்க, திமுக.வினருக்கு மட்டுமே ரேஷன் கடைகளின் டோக்கன்களும், கொரோனா தடுப்பூசி வழங்கும் டோக்கன்களும் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் தென்பாகம் ஊராட்சிக்குட்பட்ட ஒத்தையூர் கிராமம் பகுதியில், ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்படும் டோக்கன்களை திமுக பிரமுகர்களே வழங்கினர். அப்போது பொதுமக்களுக்கு டோக்கன்கள் வழங்காமல், தி.மு.க.வினருக்கு மட்டுமே வழங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ராகுல் என்பவர் பொதுமக்களுக்கு டோக்கன் கிடையாதா? நாங்களும் தான் வாக்களித்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.வினர் செல்லமுத்து, பொன்னுசாமி, சரவணன், நல்லுசாமி, சதீஷ், பாஸ்கர், சுப்பிரமணி ஆகியோர் கல்லூரி மாணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது27), நடேசன் என்பவரும் தட்டிக்கேட்டனர். இதனால் 3 பேர் மீதும் போலீசில் தி.மு.க.வினர் புகார் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து தி.மு.க.வினரின் தூண்டுதலின் பேரில் பொதுமக்கள் 3 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு அவர்களை கைதும் செய்துள்ளனர்.

இதனையறிந்த கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் மதுசுதன் தலைமையில் அதிமுகவினர் திரண்டு வந்து டோக்கன் கேட்டது தவறா, அனைவருக்கும் தானே பொருட்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தி.மு.க.வினருக்கு மட்டுமே அனைத்து பொருட்களும் வழங்க வேண்டுமென்று உத்தரவிடவில்லையே என்று நியாயம் கேட்டனர். இதையடுத்து டோக்கன் தரவில்லையே என்று கேட்ட பொதுமக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்த முயற்சித்த தி.மு.க.வினர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

தி.மு.க.வினரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தவறு செய்த திமுகவினர் மீது அதே பகுதியை சேர்ந்த நடேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் கொடுத்த புகாரை பெற போலீசார் மறுத்து விட்டனர். பொதுமக்களின் நீண்டநேர போராட்டத்திற்கு பின்னர் புகாரை போலீசார் பெற்றுக்கொண்டனர்.