என்னை ஒருமையில் மரியாதை இல்லாமல் எடப்பாடி பேசுவதா.?அவரைப்போன்று என்னாலும் பேசமுடியும் ஆனால்..? முக ஸ்டாலின் வேதனை.!

0
Follow on Google News

திருத்தணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அம்மையார்குப்பம் ஊராட்சியில் திமுக சார்பில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசியதாவது, முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி அவர்கள் – அவரை எடப்பாடி என்று சொல்வதில்லை. ஏன் என்றால், எடப்பாடி என்று ஒரு ஊர் இருக்கிறது. நான் அண்மையில் அந்த எடப்பாடிக்குச் சென்றிருந்தேன். அங்கு இதேபோல மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நடத்தினேன்.

அப்போது அங்கிருந்த சில தாய்மார்கள் என்னிடத்தில், “ஐயா, பழனிச்சாமி என்று சொல்லுங்கள். எடப்பாடி என்று சொல்லாதீர்கள். எடப்பாடி என்று சொல்வது எங்களுக்குக் கேவலமாக இருக்கிறது“ என்று சொன்னார்கள். அதிலிருந்து, எடப்பாடி என்று சொல்வது இல்லை. பழனிசாமி என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அந்த முதலமைச்சர் பழனிசாமி, ஊர் ஊராகச் சென்று தேர்தல் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

தேர்தல் பிரச்சாரம் செல்லும் பழனிசாமி, தான் ஒரு முதலமைச்சர் என்பதையே மறந்து, மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மறந்து, ‘நீ, வா, போ, உனக்கு என்ன தெரியும், உனக்கு என்ன புரியும், யார் நீ, என்ன சொல்கிறாய்’ என்று மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசும் ஒரு முதலமைச்சராக இருந்து வருகிறார். பழனிசாமியைப் பொறுத்தவரை, தரம் இல்லாமல் இருக்கலாம். தரங்கெட்டுப்போனவராக இருக்கலாம். அவர்களிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் பதவி ஒரு தரம் மிக்க பதவி. அதை மறந்து விடக் கூடாது.

அந்தத் தரம் மிக்க பதவியை வைத்துக் கொண்டு, அவர் இவ்வாறு ஒருமையில் பேசுவது, கொச்சைப்படுத்திப் பேசுவது, விமர்சனம் செய்வது என்பது அவருடைய பதவிக்கு அழகல்ல. அவரைப்போன்று என்னாலும் பேசமுடியும். அவரைப்போல இங்கு இருக்கும் நம் கழகத் தோழர்களை அழைத்துப் பேசச் சொன்னால் பல மடங்கு பேசுவார்கள். ஆனால் நாங்கள் நிச்சயமாகப் பேச மாட்டோம். கலைஞர் அவர்கள் எங்களுக்கு அவ்வாறு கற்பித்துத் தரவில்லை. ஜனநாயக முறைப்படிதான் பேச வேண்டும் என்று கற்றுத் தந்திருக்கிறார்கள்.

ஒரு முறை பேரறிஞர் அண்ணா அவர்கள் உதாரணமாக ஒன்றைக் கூறினார். ஒரு யானைப் பாகன் யானையைக் குளத்தில் குளிப்பாட்டி விட்டு, அழைத்து வந்து கொண்டிருந்தான். அப்போது ஒரு சாக்கடையில் புரண்ட பன்றி எதிரில் வந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு எதிரில் வந்த பன்றியை யானை பார்க்கிறது. பார்த்தவுடன் அந்த யானை கொஞ்சம் ஒதுங்குகிறது. அப்போது அந்தப் பன்றி, யானையைப் பார்த்து, “பயந்து ஒதுங்குகிறது” என்று சொன்னது.

அவ்வாறு யானை ஒதுங்கியதற்கு என்ன காரணம்? பன்றியின் அருகில் சென்றால், தம் மீது சேறு ஒட்டிக் கொள்ளுமே என்பதற்காக, பன்றியை விட்டுச் சற்று விலகி செல்கிறதே அல்லாமல், பன்றிக்குப் பயந்து கொண்டு அல்ல. அவ்வாறு, முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். அதற்காக நாமும் பேச வேண்டிய அவசியமில்லை. எனவே இந்த அளவிற்குக் கேடுகெட்டத்தனமாக, எதைப்பற்றியும் கவலைப்படாமல், ஆத்திரத்தின் உச்சியில், 4 மாதங்களில் பதவி போகப்போகிறது என்ற விரக்தியில் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். நாம் அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.என ஸ்டாலின் பேசினார்.