கருணாநிதிக்கு ஆறடி இடம் கொடுக்காத பழனிசாமிக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்கலாமா? முக ஸ்டாலின் கேள்வி.?

0
Follow on Google News

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசியதாவது, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு இருக்கும் நகைக் கடனைத் தள்ளுபடி செய்வோம் என்று நான் சொன்னேன். இதைக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்திலும் சொன்னேன். அதை மிட்டாய் கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டதாக முதலமைச்சர் பழனிசாமி அப்போது விமர்சித்தார். இப்போது அறிவித்திருக்கிறீர்களே, நீங்கள் அல்வா கொடுத்து ஏமாற்றப் போகிறீர்களா?

நாம் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறப் போகிறோம் என்று சொன்னேன். இப்போது 5 நாட்களாக நான் தமிழகம் முழுவதும் சுற்றி வந்து கொண்டிருக்கும் இந்த பயணத்தில் நான் உணர்ந்ததை வைத்துச் சொல்கிறேன், 200 அல்ல 234 இடங்களிலும் நாம் தான் வெற்றி பெறப் போகிறோம்.ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுவிடக் கூடாது. அ.தி.மு.க. வெற்றி பெற்றால் அது பா.ஜ.க.வின் வெற்றி தான். இன்றைக்கு அ.தி.மு.க. – பா.ஜ.க.வின் அடிமையாக இருக்கிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நடந்த போது, ஒரே ஒரு எம்.பி. அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றார். அவர் இப்போது பா.ஜ.க. எம்.பி.யாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதுதான் உண்மையான நிலை. அந்த அளவிற்கு அடிமையாக இருக்கிறார்கள். எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. இன்றைக்கு விலைவாசி என்ன நிலையில் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்.

தலைவர் கலைஞர் அவர்களின் இறுதி விருப்பம் பேரறிஞர் அண்ணாவின் அருகே ஓய்வெடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால் இந்த ஆட்சியாளர்கள் அதைச் செய்ய விடவில்லை. இதே பழனிசாமி வீட்டிற்கு நான் சென்றேன். கலைஞர் சாதாரண தலைவர் அல்ல, 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்திருக்கிறார். இந்திய நாட்டிற்கு பல ஜனாதிபதிகளை அடையாளம் காட்டியிருக்கிறார். பல பிரதமர்களை உருவாக்கி இருக்கிறார்.

அப்படிப்பட்ட தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஆறடி இடம் கொடுக்க மறுத்த நயவஞ்சகர்கள் அவர்கள். அதற்குப் பிறகு நாம் நீதிமன்றம் சென்று வெற்றி பெற்று பேரறிஞர் அண்ணாவிற்கு பக்கத்தில் அவரை அடக்கம் செய்தோம். எனவே உங்களையெல்லாம் நான் அன்போடு உரிமையோடு கேட்க விரும்புவது, நம்முடைய தலைவர் கலைஞருக்கு அவர்களுக்கு இடம் கொடுக்காத இந்த பழனிசாமிக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்கலாமா? நன்றாகச் சிந்தியுங்கள் என பேசினார்.