வீடற்ற ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீடும் கட்டித் தரப்படும்.!

0
Follow on Google News

வீடற்ற அனைத்து ஏழைகளுக்கும் வீடு கட்டித் தரப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டபேரவையின் கூட்டத்தொடரை நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்து உரையாற்றியதாவது:– நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளிலுள்ள ஏழை மக்களுக்குத் தரமான வீட்டு வசதிகளை வழங்குவதற்கு இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. ஊரகப் பகுதியில் வீடற்ற ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கும் கான்கிரீட் கூரையுடன் கூடிய ஒரு வீடும், நகர்ப்பகுதியில் வசிக்கும் வீடற்ற ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீடும் கட்டித் தரப்படும்.

மாநிலத்தின் ஊரகப் பகுதிகளில் கட்டி முடிக்கும் தருவாயிலிருக்கும் 2,57,925 வீடுகளின் கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க உதவும் வகையில், பிரதம மந்திரியின் வீட்டுவசதித் (ஊரகம்) திட்டத்தின் கீழ், வீடு ஒன்றிற்கு சிறப்பு கூடுதல் ஒதுக்கீடாக 70,000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனுடன், பிரதம மந்திரியின் வீட்டு வசதித் (ஊரகம்) திட்டத்தின் கீழ், வீடு ஒன்றிற்கு, இந்திய அரசினால் நிர்ணயிக்கப்பட்ட விலை 1.20 லட்சம் ரூபாய்க்குப் பதிலாக, தமிழ்நாட்டில் வீடு ஒன்றிற்கு மொத்தச் செலவு 2.40 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில், மாநில அரசின் பங்கு 1.68 லட்சம் ரூபாய் ஆகும். நகர்ப்புறப் பகுதிகளில் வீட்டுவசதிகளை மேம்படுத்துவதற்காக, ‘தமிழ்நாடு நகர்ப்புற திறனுக்கேற்ற வீட்டுவசதி மற்றும் உறைவிடக் கொள்கை’ வகுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் நகர்ப்புறப் பகுதிகளில் வீட்டுவசதிகளை ஏற்படுத்துவதற்காக, உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து, அரசு நிதியுதவியை திரட்டியுள்ளது. விதிகளை எளிமைப்படுத்தியதாலும், அதிகாரங்களைப் பகிர்ந்தளித்ததாலும், திட்ட வடிவமைப்பிற்கு அனுமதி வழங்கும் நடைமுறை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்துதல் திட்டத்தின் மூலம், 39,939 மனைப்பிரிவுகள் மற்றும் 21,86,101 மனைகள் வரன்முறைப்படுத்தப்பட்டுள்ளன. பெருவாரியான மக்களின் கோரிக்கையின்படி, விடுபட்டுள்ள இனங்களுக்கு, 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் கால அளவு 28.02.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.காடுகளைப் பாதுகாப்பதற்கும், மரங்களின் பரப்பளவினை அதிகரிப்பதற்கும் இந்த அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

2019 ஆம் ஆண்டின் இந்திய வன நிலை அறிக்கையின்படி, 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளுக்கு இடையே, தமிழ்நாட்டில் 8,302 ஹெக்டேர் அளவில் வனங்களின் பரப்பளவு அதிகரிக்கப்பட்டுள்ளது மற்றும் 159 சதுர கி.மீ அளவில் மரங்களின் பரப்பளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, காடுகள் மற்றும் மரங்களின் பல்லுயிர்த் தன்மையில் இரண்டாவது நிலையை நமது மாநிலம் அடைந்துள்ளது.வனவிலங்குகளின் வாழ்விடத்தைப் பாதுகாத்து வருவதன் விளைவாக, 2014 ஆம் ஆண்டில் 229 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2018 ஆம் ஆண்டில் 264 ஆக உயர்ந்துள்ளது.இவ்வாறு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.