தேசிய விருதுக்கு தமிழகம் தேர்வு..!மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழகம் முதலிடம்.!

0
Follow on Google News

நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலமாக மத்திய அரசின் சார்பில் தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசு சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ஜல் சக்தி அமைச்சகம் சார்பில் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுக்கான மாநிலங்கள், மாவட்டங்கள், அமைப்புகளை தேர்வு செய்திட மத்திய அரசு குழு ஒன்றை நியமித்தது. இக்குழு ஒவ்வொரு மாநிலமாக சென்று சிறப்பாக நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்திய அமைப்புகளையும் திட்டப்பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் முடிவின் அடிப்படையில் இந்த விருதுகள் இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் 2019-20-ம் ஆண்டுக்கான நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலம் என்னும் தேசிய விருதுக்குத் தமிழகம் முதலிடத்தில் தகுதி பெற்றுள்ளது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தைப் பெற்றுள்ளன. ஆறுகளை மீட்டெடுத்தல் பிரிவில் தென்னிந்தியாவைப் பொறுத்தவரை இரண்டு மாவட்டங்களுக்கு மட்டுமே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் முதலிடத்தில் வேலூர் மாவட்டமும், 2-வது இடத்தில் கரூர் மாவட்டமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

நீர் சேமிப்பு என்ற பிரிவின் கீழ் மாவட்டங்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் பெரம்பலூர் மாவட்டம் 2-வது இடத்துக்குத் தேர்வாகியுள்ளது.நீர் மேலாண்மையைச் சிறப்பாகக் கையாண்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மதுரை மாநகராட்சிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலம் என்னும் தேசிய விருதுக்குத் தமிழகம் முதலிடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், நீர் மேலாண்மையை கற்பித்து, மாணவ, மாணவிகளை ஊக்குவித்த பள்ளிகளுக்கான விருதுப் பட்டியலில் புதுச்சேரியின் காட்டேரிக்குப்பத்தில் அமைந்துள்ள இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளி முதலிடத்தை பெற்றுள்ளது.

நீர் மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்ட தென்னிந்திய சமூக செயற்பாட்டாளர்களாக, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் முதல் பரிசையும், அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் டாக்டர் சக்திநாதன் கணபதி பாண்டியன் 2–-ம் பரிசையும் பெற்றுள்ளனர்.ஜல் சக்தி அமைச்சகம் சார்பில் வருகிற 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் விருதுகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதாவது:-நீர்மேலாண்மையில் 2019க்கான சிறந்த மாநிலமாக, ஜல்சக்தி அமைச்சகத்தின் தேசிய விருதினை தமிழக அரசு பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நீர்நிலைகளை புதுப்பித்தலில் வேலூர்,கரூர் மாவட்டங்கள் முதல் இரு இடங்களையும், நீர்நிலைகளை பாதுகாப்பதில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தையும் பெற்றுள்ளது. இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பதிவு செய்துள்ளார்.