தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு மறுப்பு… இந்திய அணியை வெளுத்து வாங்கிய ஆஸ்திரேலிய வீரர்…

0
Follow on Google News

டி20 உலகக் கோப்பை 2024 இன்னும் ஒரு மாதத்தில் தொடங்குகிறது. ஜூன் 2 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியை ஜூன் 5 ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிராக விளையாடுகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த மெகா கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 55 போட்டிகள் நடக்க உள்ளன. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்தது.

இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியா துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். வேகப்பந்துவீச்சுக்கு ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சுப்மான் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகியோர் மாற்று வீரர்கள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளோடு சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய அணி ஜூன் 5ம்தேதி அயர்லாந்துடன் முதல் ஆட்டத்தில் மோதுகிறது. அதன்பின், ஜூன் 9-ம் தேதி பாகிஸ்தானுடனும் அதைத் தொடர்ந்து 12-ம்தேதி அமெரிக்காவுடனும், 15-ம் தேதி கனடா அணியுடனும் இந்திய அணி மோதுகிறது.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இஷாந்த் கிஷன், கே.எல்.ராகுல், சுப்மான் கில், ரிங்கு சிங், திலக் வர்மா, ருத்ராஜ் மற்றும் நடராஜன் ஆகியோர் இல்லாதது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பௌலர் டி நடராஜன் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வருகிறார். குறிப்பாக, டெத் ஓவர்களில், சிக்கனமாக ரன்களை விட்டுக்கொடுத்து, முக்கிய விக்கெட்களை கைப்பற்றி அசத்தி வருகிறார்.

ஆனால், இவருக்கு டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு வழங்கவில்லை. இந்த சூழ்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியான ‘மென் இன் ப்ளூ’ நிகழ்ச்சியில் டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் சமநிலை குறித்து மேத்யூ ஹைடன் கூறியதாவது, “ரோகித் சர்மா ஒரு தலைவராக சிறந்து விளங்குகிறார். இதற்கு முன்னர் பெரிய தொடர்களில் விளையாடிய அனுபவமும் அவருக்கு இருக்கிறது.

வேகப்பந்துவீச்சாளர்களாக பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் வலுவான தேர்வாக இருப்பார்கள். ஆனால் இந்த அணியில் நடராஜன் இடம் பெற்று இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஐபிஎல்லில் மிகச் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார். அதுபோலவே உலகக் கோப்பையிலும் இறுதிக்கட்டத்தில் டெத் ஓவர்களில் அவரால் நன்றாக பந்து வீச முடியும். ஓட்டு மொத்தமாக பார்க்கையில் இது ஒரு சமநிலையான மிகச் சிறந்த அணி.

சூரியகுமார் யாதவ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் உலகத்தரமான புதுமையான பேட்ஸ்மேன்களாக விளங்குகிறார்கள். இந்தத் தலைமுறையில் அவர்கள் மற்ற வீரர்களை காட்டிலும் புதுமையான விஷயங்களை செய்கிறார்கள். மேலும் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இருப்பது இந்திய அணிக்கு ஒரு பெரிய போனஸ். மேலும் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சார் பட்டேல் ஆகியோர் சுழற் பந்து ஆல்ரவுண்டர்களாக இருப்பது இந்தியாவின் பேட்டிங் ஆழத்தை அதிகரிக்கிறது.

இந்தியாவின் வேகத் தாக்குதலுக்கு பும்ரா உறுதுணையாக இருப்பார். ஒட்டுமொத்தமாக இந்தியா கலவையான சமநிலை அணியைக் கொண்டுள்ளது. ஆனால் கடந்த 50 ஓவர் உலக கோப்பையிலும் இதையேதான் நம்பினோம். உண்மையில் பேப்பர்களில் இருக்கும் பெயர்களை விட, நல்ல மனநிலையுடன் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தினால் மட்டுமே வெல்ல முடியும்” என்று கூறியிருக்கிறார்.