திரிஷாவா? தமன்னாவா?… இந்தியன் 2 வில் நடிக்கப் போவது யார்?

0
Follow on Google News

கிட்டத்தட்ட 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்ட இந்தியன் 2 திரைப்படம் பல சிக்கல்களால் கிடப்பில் கிடக்கிறது. 1996 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய திரைப்படம் இந்தியன். அதன் இரண்டாம் பாகத்தை அதே கூட்டணியோடு உருவாக்க முடிவு செய்த ஷங்கர் கமல் நடிப்பில் லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக ஆரம்பித்தார்.

ஆனால் நினைத்தது போல படப்பிடிப்பு எளிதாக நடக்கவில்லை. பல சிக்கல்களால் பாதிக்கப்பட்டு இப்போது ஒரு ஆண்டுக்கும் மேலாக படபிடிப்பு நடக்கவில்லை. இதற்கிடையில் படத்தில் நடித்திருந்த விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகிய நடிகர்கள் மறைந்துவிட்டனர். இதனால் அவர்களின் காட்சிகளை என்ன செய்வது என்ற குழப்பத்தில் இயக்குனர் உள்ளார்.

இதையெல்லாம் விட இப்போது மேலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த காஜல் அகர்வால் திருமணத்துக்குப் பின் திரை வாழ்க்கையில் இருந்து ஒதுங்க முடிவு செய்துள்ளாராம். அதனால் அந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவர் கதாபாத்திரத்துக்காக இப்போது திரிஷா மற்றும் தமன்னா ஆகிய இருவரில் ஒருவர் நடிக்க உள்ளதாகவும், இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. படப்பிடிப்பின் போது யாரிடம் தேதிகள் கிடைக்கிறதோ அவர் இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.