சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரையரங்குகளில் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் ஒரு ஆண்டு காத்திருப்புக்குப் பின்னர் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியானது.
வெளியானது முதல் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததை அடுத்து திரையரங்குகளில் கூட்டம் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் படம் எப்படி முதல் லாக்டவுனுக்குப் பிறகு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதோ அதே அளவு வெற்றியைப் பெற்றது. இந்த படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.
தீபாவளியை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டது. அதிலும் டி ஆர் பி ரேட்டிங்கில் சாதித்தது. பின்னர் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நவம்பர் 5 ஆம் தேதி வெளியானது.
இந்நிலையில் நெட்பிளிக்ஸில் முதல் இரண்டு வாரங்களில் உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள் பட்டியலில் டாக்டர் திரைப்படம் 10 இடங்களுக்குள் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல இந்தியா டிரெண்டிங்கிலும் முன்னணி இடத்தில் உள்ளது.