மஞ்சுமல் பாய்ஸ்… குணா குகைக்கு பின்னால் இருக்கும் உண்மை சம்பவம்…

0
Follow on Google News

மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் கேரளாவில் தாண்டி தமிழ்நாட்டில் வெற்றி நடை போடுகிறது. தமிழகத்தின் கொடைக்கானலில் உள்ள குணா குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மஞ்சும்மமல் பாய்ஸ் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தில் இடம் பெற்ற குணா குகை என்று அழைக்கும் குகை, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் devil’s kitchen அதாவது பேய்களின் சமையலறை என்றுதான் அழைக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் குகை இவ்வாறு அழைக்கப்படுவதற்கு பல கதைகளும் சொல்லப்படுகின்றன. அதாவது 1821ஆம் ஆண்டில் இந்த குகை இருக்கும் பகுதியில் யாரோ சமைப்பது போன்ற சத்தம் கேட்டு ஆங்கிலேயர் ஒருவர் அந்த பகுதிக்கு சென்று பார்த்ததாகவும், ஆனால் அங்கு அப்படி யாரும் இல்லை என்று அவர் திரும்பி வந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அதை எடுத்து அந்த குகையை ஆய்வு செய்ய சென்ற பலரும் மர்மமான முறையில் மாயமானதால் அந்த குகைக்கு பேய்களின் சமையலறை என்று பெயர் வந்ததாம். பல தசாப்தங்களுக்கு பிறகு, 1991 ஆம் ஆண்டு நடிகர் கமலஹாசனின் நடிப்பில் வெளியான குணா திரைப்படத்திற்குப் பிறகு தான் இந்த குகை குணா குகை என்று பெயர் பெற்றுள்ளது.

அன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான படத்தில் உள்ள பாடல் காட்சிகள் ஊட்டி கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் தான் படமாக்கப்பட்டு வந்தன. அப்படியான நிலையில், குணா படத்தின் ஹீரோ கமலும் இயக்குனர் சந்தான பாரதியும் கொடைக்கானலில் அதுவரை படப்பிடிப்பை நடக்காத இடத்தில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று முனைப்பில் தேடிய போது தான் இந்த குகையை கண்டுபிடித்து தேர்வு செய்துள்ளனர்.

அந்த குகை அன்று அருமையான லொகேஷன் ஆக இருந்தாலும் படக்குழுவினர் மிகவும் சிரமப்பட்டு குகையில் ஷூட்டிங் நடத்தியுள்ளனர். குகையில் படமாக்கப்பட்ட பாடல் காட்சிகளும் பாடலும் பயங்கரமாக ஹிட் அடிக்கவே, படம் வெளியானதில் இருந்து அந்த குகைக்கு குணா குகை என்று பெயர் வந்து விட்டது. அன்றிலிருந்து இன்றுவரை கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் குணா குகையை பார்க்காமல் செல்வதில்லை.

அதே சமயம் இந்த குகையில் தவறி விழுந்து ஏராளமான ஒரு உயிரிழந்ததை அடுத்து, வனத்துறை இந்த பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதித்தது. மேலும், இரும்பு கம்பிகளால் குகைக்கு செல்லும் பாதையையும் குகையையும் மூடியது. இப்படி நீண்ட காலமாக சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அந்த இரும்பு கம்பிகளை மட்டுமே பார்த்துவிட்டு திரும்பி வந்த நிலையில், மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் உண்மையிலேயே குகைக்குள் சென்று பார்த்த அனுபவத்தை சுற்றுலா பயணிகளுக்கு கொடுத்துள்ளது.

குணா குகைக்குள் விழுந்தவர்கள் இதுவரை திரும்ப வந்தது கிடையாது. கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் மட்டுமே குணா குகையில் இருந்து உயிரோடு மீட்கப்பட்டவர். குணா குகையில் விழுந்து பலியானவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 10க்கும் மேற்பட்டது என்றாலும், ஏராளமானோர் உயிரிழந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்துக் கொண்டிருக்கும் மஞ்சம்மல் பாய்ஸ் படத்தைப் பார்த்துவிட்டு, பெரும்பாலானவர் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர்.

இன்னும் சிலர் பாதுகாப்புடன் சுற்றுலா பயணிகள் குகையை சுற்றி பார்த்து வர சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அதற்கு சாத்தியம் இல்லை என்று வனத்துறை அதிகாரிகள் பதில் அளித்து வருகின்றனர்.