காலி இருக்கைகள்…. கலைஞர் நூற்றாண்டு விழாவை புறக்கணித்த மக்கள்…

0
Follow on Google News

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கலைஞரின் பங்களிப்பைப் போற்றும் விதமாக ‘கலைஞர் 100’ விழாவை தமிழ் திரையுலகம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் என அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்துகிறது.

சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். மேலும் ரஜினி, கமல், சிவராஜ்குமார், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி, அருண் விஜய், விஜய் ஆண்டனி, நயன்தாரா, வடிவேலு, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் விஜய், அஜித் இருவரும் பங்கேற்பார்களா என்பதில் தான் எதிர்பார்ப்பு இருந்தது. இதில் அஜித் எப்போதும் பொது நிகழ்ச்சியில் பெரிதும் கலந்து கொள்ளாதவர். கடந்த 2006-2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகம் சார்பில் “பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா” நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகமே கலந்து கொண்டது.

இதில் பேசிய அஜித், இதுபோன்ற விழாவுக்கு தங்களை கட்டாயப்படுத்தி வரவைக்கிறார்கள் என வெளிப்படையாக குற்றம் சாட்டினார். இது திமுகவினர் இடையே மிகப்பெரிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனால் அவர் கண்டிப்பாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார் என சொல்லப்பட்டது போலவே அஜித் வரவேயில்லை. அதேசமயம் விஜய், இதுபோன்ற ஆளும் கட்சி நிகழ்ச்சியில் எல்லாம் பெரிய அளவில் எதிர்ப்பு காட்டாமல் கலந்து கொள்வார்.

ஆனால் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் வருகையில் தீவிரம் காட்டும் விஜய், அதனை கருத்தில் கொண்டு வராமல் இருந்ததாக ஒரு பக்கம் இணையத்தில் தகவல் வெளியாகி வைரலானது. அதேசமயம் அவர் ஊரிலேயே இல்லை எனவும் கூறப்பட்டது. எது எப்படியோ தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இல்லாமலேயே இந்த விழா முடிந்து விட்டது.

இப்படி ஒரு நிலையில் இந்த விழாவிற்கு எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பான வீடியோக்களும் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக ரஜினி பேசிய போது இருக்கைகள் காலியாக இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னணி இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜாவும் வரவில்லை. எதிர்பார்த்த அளவிற்கு மக்களும், திரைப்பிரபலங்களும் வராமல் சொதப்பல் நிகழ்ச்சியாக மாறியதற்கு சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் எனக் சொல்லப்படுகிறது.

ரசிகர்கள் பொறுமை இழக்கும் அளவிற்கு நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதேசமயம் 22 ஆயிரம் பேர் அமரக்கூடிய கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் விழாவை நடத்துவது சர்வ சாதாரணம் இல்லை. மேலும் இது தயாரிப்பாளர் சங்கம் நடத்திய விழா என்பதால் பெரிய அளவில் எதிர்பார்ப்பும் எழவில்லை.

விழா மாலை 4 மணி முதல் 10 மணி வரை திட்டமிட்டப்பட்ட நிலையில் சற்று முடிய தாமதமாகி விட்டது. அதனால் ரஜினி, முதலமைச்சர் ஸ்டாலின் பேசும்போது சில பகுதிகளில் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நேரமின்மை காரணமாக சென்றனர். அந்த பகுதியில் இருக்கும் புகைப்படங்கள்தான் சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது என சிலர் தெரிவித்துள்ளனர்.