காவிரிப் பிரச்சனையைக் கொச்சைப்படுத்துகிறதா சந்தானத்தின் சபாபதி போஸ்டர்? எழுந்த சர்ச்சை!

0
Follow on Google News

சந்தானம் நடித்துள்ள ‘சபாபதி’ திரைப்படம் வரும் 19-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயக நடிகரான சந்தானம் இப்போது தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளார். அவர் நடிக்கும் படங்கள் வரிசையாக தோல்வி அடைந்தாலும், வருடத்துக்கு 3 படங்களாவது அவர் நடிப்பில் வெளியாகிறது. அதில் ஏ1, தில்லுக்கு துட்டு போன்ற படங்கள் வரவேற்பைப் பெறுகின்றன.

இந்நிலையில் சந்தானம் நடிப்பில் ஸ்ரீனிவாச ராவ் இயக்கி நீண்ட நாட்களாக ரிலிஸாகாமல் இருந்த ‘சபாபதி’ நவம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படம் ஹாலிவுட் படமான ரோல் மாடல்ஸ் எனும் படத்தின் காப்பி என சொல்லப்படுகிறது. அதை உறுதிப் படுத்தும் விதமாகவே போஸ்டரும் டிரைலரும் இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டர் ஒன்று இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சம்மந்தப்பட்ட அந்த போஸ்டரில் சந்தானம் ஒரு சுவரின் மீது சிறுநீர் கழிக்கிறார். அந்த சுவரில் ‘தண்ணீர் திறந்துவிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம், திரண்டு வாரீர்’ என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளதாக பலரும் சமூகவலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.