நடிகரின் படங்களின் வெற்றியை பொறுத்தே வசூலும் அமைகிறது. உதாரணமாக பல தோல்வி படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. ஆனால் அடுத்து அவரது ஏஸ் படம் பிளாப் ஆனது. இப்போது தலைவன் தலைவி நல்ல வசூலை தந்திருக்கிறது. தனுஷ் நடித்த ராயன் படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூலித்தது. ஆனால் அடுத்து அவர் நடித்த குபேரா படம் தமிழில் ரூ. 17 கோடி மட்டுமே வசூலித்திருந்தது.
இதற்கிைடையே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 2023ம் ஆண்டில் வெளியான படம் லியோ. நடிகர் விஜய் நடித்த இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமார். தனது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மூலம் தயாரித்திருந்தார்.

கடந்த 2023ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாக லியோ படமும் இருந்தது. இந்த படத்தில் இரட்டை பிறவி நரபலி ஜோதிடம் போன்ற காட்சிகள் வந்ததால் விமர்சன ரீதியாக பலத்த சர்ச்சைகளை சந்தித்தபோதும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் லியோ படம் பெற்றது.
அப்போது லியோ படத்தின் வசூல் மொத்தம் 600 கோடி ரூபாய் என்று தயாரிப்பாளர் தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த நிலையில், இப்போது வெளியான வருமான வரி தாக்கல் தகவலின்படி லியோ படத்தின் உண்மையான வசூல் 404 கோடி ரூபாய் மட்டுமே என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் லியோ படத்தின் மொத்த வசூல் 600 கோடி ரூபாய் என்று அன்று கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது வருமான வரி தாக்கலில் லியோ படத்தின் உண்மையான வசூல் 404 கோடி ரூபாய் என்று தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. அதனால் இப்போது இந்த படத்தில் வசூலில் 200 கோடி ரூபாய் வித்தியாசம் இருப்பது தற்போது இணையத்திலும் கோலிவுட்டில் ரசிகர்கள் மத்தியிலும் விவாதமாக மாறி உள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் வெளியிடும் படத்தின் வசூல் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்களும் விமர்சகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனால் படத்தின் விளம்பரத்துக்காக வசூலை அதிகரித்து சொன்னார்களா, என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. லியோ படத்தின் வசூல் குறித்து எழுந்துள்ள இந்த புதிய சர்ச்சையால் நடிகர் விஜய் நடித்த லியோ படம் ரசிகர்கள் மத்தியில் தற்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது. ஒரு படத்துக்கு தியேட்டரிக்கல் நான் தியேட்டரிக்கல் என 2 விதமான வசூல் இருந்தாலும் தயாரிப்பாளர் சொல்லும் வசூலே உண்மையானதாக இருக்கும் என்று ரசிகர்கள் தரப்பில் நம்பிக்கை இருந்து வருகிறது. அதனால் லியோ படத்தின் வசூலில் இப்போது சந்தேகமும் குழப்பமும் நிலவுகிறது.
ஆனால் அதே நேரத்தில் லியோ படத்தின் மொத்த வசூல் 600 கோடி ரூபாய்க்கு மேல் இருந்தது உண்மைதான். அந்தப் படத்தை தயாரித்த வகையில் தயாரிப்பாளருக்கு கிடைத்த லாபம் தான் 404 கோடி ரூபாய். அவர் வருமான வரி தாக்கலில் குறிப்பிட்டது லியோ படம் மூலம் தனக்கு மட்டும் கிடைத்த லாபத்தை மட்டும்தான். லியோ படத்தின் மொத்த வசூலை அல்ல என்றும் ஒரு விளக்கம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆனாலும் இது ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக மாறி இப்போது இணையதளங்களில் சூட்டை கிளப்பியிருக்கிறது.

