சினிமாவில் நேர்மை, நியாயம் பன்ச் பேசிட்டு… நிஜவாழ்க்கையில் கோட்டை விட்ட சமுத்திரக்கனி..

0
Follow on Google News

விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 15 ஆம் தேதி வெளியானது. வினோத் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து கடந்த 28 ஆம் தேதி இந்தியில் வெளியாகியுள்ளது.

இதையடுத்து தணிக்கை வாரிய குழுவில் ஊழல் நடப்பதாக விஷால் பரபரப்பான ஒரு குற்றச்சாட்டை வைத்து வீடியோ வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திரையில் ஊழலை காட்டுவது பரவாயில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் அதை ஜீரணிக்க முடியாது. குறிப்பாக அரசு அலுவலகங்களில் நடப்பது. மத்திய திரைப்படத் தணிக்கை வாரிய குழுவின் மும்பை அலுவலகத்தில் இன்னும் மோசமாக நடக்கிறது.

எனது மார்க் ஆண்டனி இந்தி பதிப்பிற்கு 2 பரிவர்த்தனைகளாக 6.5 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. திரையிடலுக்கு 3 லட்சம் மற்றும் சான்றிதழுக்கு 3.5 லட்சம். படத்தை வெளியிடவேண்டும் என்ற நெருக்கடியால் பணம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. எனவே இதை மகாராஷ்டிராவின் முதலமைச்சர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

இதை செய்வது எனக்காக அல்ல எதிர்கால தயாரிப்பாளர்களுக்காக. நான் உழைத்து சம்பாதித்த பணம் ஊழலுக்கு போவதா? வாய்ப்பே இல்லை. எப்போதும் போல் உண்மை வெல்லும் என்று நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். இது திரையுலகில் பரபரப்பைக் கிளப்பியது. இதையடுத்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில் விஷால் குற்றச்சாட்டுக்கு, “தணிக்கை குழுவின் மேல் விஷால் வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டு மிகவும் துரதிருஷ்டவசமானது.

ஊழலை அரசு பொறுத்துக் கொள்ளாது, இதில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி விசாரணை நடத்த மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளார்” என குறிப்பிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்ட்ரா முதல்வருக்கு விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி தானும் லஞ்சம் கொடுத்ததாக பகிர் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி, கடைசியாக தெலுங்கில் பவன் கல்யானை வைத்து ‘ப்ரோ’ படத்தை இயக்கியிருந்தார். ‘வினோதய சித்தம்’ படத்தின் ரீமேக்கான இப்படம் கடந்த ஜூலை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தமிழில் ‘திரு.மாணிக்கம்’ என்ற தலைப்பில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படகில் ஹீரோவாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சேலத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சமுத்திரக்கனி கலந்துகொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “என்னுடைய அப்பா திரைப்படத்துக்கு வரிவிலக்கு வாங்க காசு கொடுத்தேன். அந்த காலகட்டத்தில் நியாயமாக அப்பா திரைப்படம் அரசு எடுக்க வேண்டியது. அப்படிப்பட்ட சூழலில், நான் கஷ்டப்பட்டு, நான் தயாரித்த ஒரு படத்துக்கு பணம் கொடுத்து தான் வரிவிலக்கு சான்றிதழ் வாங்கினேன். அது ரொம்ப வருத்தமளித்தது” என்றார்.

ஆனால், சென்சார் போர்டுக்கு இதுவரை பணம் ஏதும் கொடுத்ததில்லை என்றும் அவர் விளக்கமளித்தார். காவிரிக்காக நிச்சயம் குரல் கொடுப்பேன் என்றும் அதே நேரத்தில் தனி மனிதனாக எதுவும் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார். சமுத்திரக்கனி, தம்பி ராமையா, நமோ நாராயணா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அப்பா. 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது.