அதை நான் செய்யவில்லை என்று பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு பச்சை பொய் பேசுகிறார் ஸ்டாலின்.! அமைச்சர் உதயகுமார் விளாசல்.!

0
Follow on Google News

10 ஆண்டுகளுக்கு முன்பு விவசாய தொழிலை அழிக்க திமுக அரசால் போடப்பட்ட சிவரக்கோட்டை சிப்காட் திட்டத்தை ரத்து செய்து 15,000 விவசாய குடும்பத்தை காப்பாற்றிய முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்து அமைச்சர் ஆர்.பி‌. உதயகுமாரிடம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களிப்போம் என 27 வகையான தானியங்களை வழங்கி விவசாயிகள் உறுதி அளித்தனர். கடந்த 12.6.2009 அன்று திமுக ஆட்சிக்காலத்தில் திருமங்கலம் தொகுதி சிவரக்கோட்டை பகுதியில் சிப்காட் அமைக்கும் திட்டத்தை தொடங்கி 1,478 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.

கரிசல் மண் நிறைந்த இப்பகுதியில் வரகு, கேழ்வரகு, சாமை, குதிரைவாலி, கம்பு, மக்காச்சோளம், ஆமணக்கு, அவரி, பருத்தி, நித்தியகல்யாணி, உளுந்து, துவரை, சுண்டல், சிவப்பு சோளம், பாசிப்பருப்பு, மொச்சை, தட்டைபயிறு, கொள்ளு மற்றும் சீனி அவரை என 27 வகையான சிறுதானியங்கள் மூன்று போகம் விளைச்சல் செய்யப்படுகிறது. மேலும் 10 கிலோ மீட்டர் அளவில் கப்பலூரில் தொழில்பேட்டை உள்ளது. எனவே விவசாயத்தை பாதிக்கும் இத்திட்டத்தை வேண்டாமென்று அப்போது விவசாயிகளும், கிராம மக்களும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இருப்பினும் இத்திட்டத்தை தி.மு.க. கைவிடவில்லை. இதன்பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இத்திட்டத்தை நிறுத்தி வைத்தார்.

மேலும் இத்திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்கள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இப்பிரச்சினையை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதைத்தொடர்ந்து கடந்த 21-ந்தேதி திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்யப்பட்டது.இதையடுத்து இந்த ரத்து செய்யப்பட்ட ஆணையை அப்பகுதி விவசாயிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விவசாயிகளிடம் ஆணையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:- விவசாய காக்கும் ஒரே அரசாக அதிமுக அரசு செயல்படுகிறது. அதற்கு இதுவும் ஒரு சான்று. ஆனால் நாட்டு மக்களுக்கு எதுவும் செய்யாமல் கிராம சபை கூட்டம் என்று ஸ்டாலின் நடத்துகிறார். கிராம சபை கூட்டத்தை ஊராட்சி தலைவர் தான் கூட்ட வேண்டும். நான் நினைத்தால் கூட கூட்ட முடியாது. கிராம சபை கூட்டம் நடத்த இப்போது என்ன அவசியம் ஏற்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு பாதகமான செயலைத்தான் செய்தார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கூட கையெழுத்திட்டு அதை நான் செய்யவில்லை என்று பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு பச்சை பொய் பேசுகிறார் ஸ்டாலின். இதையெல்லாம் விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும். இது மட்டுமல்ல சிப்காட் திட்டத்தை கொண்டு வந்து உங்கள் வாழ்வாதாரத்தை அழிக்க நினைத்தது திமுக. ஆனால் சிப்காட் திட்டத்தை ரத்து செய்தது மட்டுமல்லாது காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து ஒட்டுமொத்த விவசாய மக்களை காக்கும் அரசாக அதிமுக அரசு உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் இத்திட்டத்தை மீண்டும் செயல் படுத்துவார்கள். ஆகவே நீங்கள் அனைவரும் துணையாக நின்று வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு வெற்றியை தர வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.