கன்னியாகுமரியில் உள்ள விவகானந்தர் பாறை- திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் தொங்குபாலம்.!

0
Follow on Google News

கன்னியாகுமரியில் உள்ள விவகானந்தர் பாறை- திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் ரூ.35 கோடி மதிப்பில் தொங்குபாலம் விரைவில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டங்களுக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கன்னியாகுமரி மாவட்ட மக்களும், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப்பிரதிநிதி தளவாய்சுந்தரம் வைத்த பல்வேறு கோரிக்கைகளை ஏற்று சில அறிவிப்புகளை செயல்படுத்த அம்மாவின் அரசு முடிவு செய்துள்ளது. மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் அம்மாவின் அரசு, நாட்டின் வளர்ச்சிக்காகவும் ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுபவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சாலைகள் மற்றும் மேம்பாலங்களுக்கு அன்னாரது பெயர்களை வைத்து பெருமை சேர்த்து வருகிறது.

தற்போது தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி மற்றும் மீன்வளத் துறை அமைச்சர், ஆகியோரின் கோரிக்கையை ஏற்று இந்தப் பகுதி மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் வகையில், கீழ்க்கண்ட அறிவிப்புகளை அறிவிக்க விரும்புகிறேன். பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் இடம் பெற்ற ஒரே பெண் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் ஆவார். இவர் சிறந்த நிர்வாகி. தொலைநோக்குப் பார்வையுடன் ஏழை, எளிய மக்களுக்காக பல திட்டங்களை வகுத்தவர். அன்னாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் மணக்குடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு லூர்தம்மாள் சைமன் பாலம் என பெயர் சூட்டப்படும் என பெருமையுடன், மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய சுதந்திர போராட்ட வீரர் சதாவதானி செய்குதம்பி பாவலர் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் செய்த தொண்டினைப் போற்றி அன்னாருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண்-18ல் கோட்டார் எலாக்குடி சந்தித் தெருவிற்கு சதாவதானி செய்குதம்பி பாவலர் தெரு என பெயர் சூட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுமக்களின் வசதிக்காகவும் பணியாளர்களின் பணிச் சூழலை மேம்படுத்தவும் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்கென புதிய அலுவலகக் கட்டடம் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். தோவாளை சுற்றுப்புற கிராம மக்கள் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில் தோவாளையிலிருந்து மாதவலாயம் கிராமச் சாலை ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு சுற்றுலாத்தலங்களுக்கு பொதுமக்கள் அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது, இந்நோய்ப் பரவல் குறைந்துள்ள நிலையில் கன்னியாகுமரி சுற்றுலாத் தலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு அனுமதிக்கப்படுகிறது. கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றிற்கு படகுப் போக்குவரத்து இன்று (நேற்று) முதல் ஆரம்பிக்கப்படும். விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் சுமார் ரூ. 35 கோடி மதிப்பீட்டில் தொங்குபாலம் ஒன்று விரைவில் அமைக்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.