ஆட்டோ, டாக்ஸிகளுக்கு கடும் கட்டுப்பாடு.! மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.!

0
Follow on Google News

கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு 10.4.2021 முதல் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், குடமுழுக்கு/திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்/இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம்
அனுமதி பெற்றிருந்தாலோ அல்லது குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயம் செய்திருந்து முன்னேற்பாடுகள் செய்திருந்தாலோ, 50 நபர்கள் பங்கேற்புடன் நடத்திட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தற்போது, இந்த நடைமுறை மாற்றப்பட்டு, பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல், கோயில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. புதிதாக குடமுழுக்கு | திருவிழா நடத்த அனுமதி இல்லை. நிகழ்ச்சிகளில் திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில்25 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்களில் (IT & ITES companies) குறைந்த பட்சம் 50 சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்தே கண்டிப்பாக பணிபுரிய (Work from Home) வேண்டும். கோல்ஃப், டென்னிஸ் கிளப் (club) உள்ளிட்ட அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கம் / குழுமங்கள் (sports training academy) செயல்பட அனுமதி இல்லை. எனினும், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கான பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.

புதுச்சேரி தவிர்த்து, ஆந்திரபிரதேசம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நபர்கள் http://eregister.tnega.org என்ற வலைதளத்தில் பதிவு செய்த (e-registration) விவரத்தினை தமிழ்நாட்டிற்குள் நுழையும்போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர். வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு விமானம் / கப்பல் மூலம் வரும் பயணியர் அனைவரும் http://eregister.tnega.org என்ற வலைதளத்தில் பதிவு செய்த (e-registration) விவரத்தினை காண்பித்த பின்னரே தமிழ்நாட்டிற்குள் நுழையும்போது அனுமதிக்கப்படுவர்.

ஏற்கனவே ஆணையிடப்பட்டவாறு, தனியார் மற்றும் அரசு பேருந்துகளில், இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை. வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில், ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகள் மட்டும் பயணிக்கவும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்கவும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.