உசிலம்பட்டி : உசிலம்பட்டி பகுதியில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சரான சேகர்பாபுவை நாவடக்கத்துடன் பேசவேண்டும் என எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன.
செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா ” பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தேசியம் மற்றும் தெய்வீகம் என வாழ்ந்தவர். அவர் இரண்டிற்குமே அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால் தற்போது தமிழகத்தில் தேசியம் தெய்வீகம் இரண்டுக்குமே பேராபத்து வந்துள்ளது. மாநிலங்கள் உருவானதே சுதேசி அரசுகளை தேசிய அளவில் ஒன்றிணைத்த பின்னர்தான்.
ஆனால் தேசத்தை மாநிலங்கள் உருவாக்கவில்லை. மாநிலங்கள் ஒன்று சேர்ந்தே தேசத்தை உருவாக்கியது என்ற தவறான பொய்யான தகவலை மக்கள் மனதில் பதிய வைக்கும் ஒரு மோசமான அரசு தற்போது நடந்துகொண்டிருக்கிறது. தருமபுரம் ஆதீனம் பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு பின்னர் திமுகவின் போக்கில் மாற்றம் தெரிகிறது.
ஹிந்துக்களுக்கு எதிராகவும் அதன் தலைவர்களுக்கும் ஆதீனங்களுக்கும் எதிராக ஒருசிலர் ரவுடிகள் போல நடந்துகொண்டுவருகின்றனர். திமுக அமைச்சர் சேகர்பாபு “தூக்கி அடிப்பேன். சும்மா இருக்கேன்னு நினைச்சியா” என கண்ணியமற்று பேசியுள்ளார். ஒரு அமைச்சர் பேசும் விதமா இது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலில் எப்படி கிடந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.
மதுரை ஆதீனத்திற்கு எதிராக வன்முறையான கருத்துக்களை கூறியுள்ளார் சேகர்பாபு. அவர் அமைச்சருக்கான மதிப்பையும் மரியாதையையும் காப்பாற்றிக்கொள்ளவேண்டும். கடிந்த வார்த்தைகள் பேசினால் பிஜேபி களத்தில் இறங்கும். நீங்கள் அடிக்க தயார் என்றால் நாங்களும் தயார். திமுக ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் நூறு கோவில்களை இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர்.நீர்நிலைகளில் இருந்ததால் இடித்தோம் என கூறுகின்றனர்.
மேற்கு மாம்பலத்தில் ரோடு மட்டும் லேக் வியூ ரோடு. ஆனால் குளம் எங்கே உள்ளது. இங்கே திராவிட இயக்கம் தமிழை தமிழர் பண்பாட்டை கோவில்களை இடிக்க மட்டுமே உள்ளது” என ஹெச்.ராஜா அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுகவை கடுமையாக சாடினார்.