சேலம் : சேலம் மாவட்டம் எடப்பாடி அருகில் தனியாருக்கு சொந்தமான கல்லூரி பேருந்தும் தனியாருக்கு சொந்தமான பயணிகள் பேருந்தும் நேருக்கு நேராக மோதிக்கொண்டதில் முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள சம்பவம் சேலத்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.
தனியாருக்கு சொந்தமான பேருந்துகளில் வேகக்குறைப்பான் பொருந்துமாறு அரசு அறிவுறுத்தியிருந்தாலும் ஒருசிலர் தங்களது சுயதேவைக்காக வேகக்குறைப்பான்களை பொருத்துவதில்லை. இதனால் பொதுமக்களே பெரும் ஆபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இந்நிலையில் நேற்றுமாலை எடப்பாடி அருகே நடந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அனைவரையும் நிலைகுலையச்செய்துள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து ஒன்று முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் சங்ககிரியை நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருந்தது. கோழிப்பண்ணை அருகே தனியார் பேருந்து அதிவேகமாக சென்றது. அப்போது அந்த பேருந்தில் சின்னபொண்ணுதான் வெட்கப்படுது என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
பேருந்து ஓட்டுனரும் பாடலை ரசித்தவாறே பேருந்தை இயக்கியதாக தெரிகிறது. இதனிடையே திருச்செங்கோடு பகுதியிலிருந்து எதிர்திசையில் வந்த கே.எஸ்.ஆர இன்ஸ்டியூட்க்கு சொந்தமான பேருந்து ஒன்று தனியார் பயணிகள் பேருந்தில் எதிர்ப்பாராவிதமாக மோதியது. எதிர்திசையில் தவறான முறையில் எறிவருவதை கண்ட பயணிகள் பேருந்து விபத்தை தடுக்க முயன்றும் பயனில்லாமல் போனது.
இதில் தனியார் பேருந்து ட்ரைவர் அருணாச்சலம் எஞ்சின் மீது தூக்கியெறியப்பட்டார். இரண்டு பேருந்துகளிலும் முன்சீட்டுகளில் இருந்தவர்கள் படுகாயமடைந்துள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து காயமடைந்தவர்களை மீட்டு அரசுமருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் விபத்துக்குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.