தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபிய சிறப்பு பொருளாதார மண்டலம்.!

0
Follow on Google News

தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவ ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பு திட்டமிட்டு வருவதாக அந்தக் கூட்டமைப்பின் தேசிய இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார். ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பின் தமிழ்நாடு கிளை சென்னையில் தொடங்கப்பட்டது.

சென்னை தி.நகரில் நடந்த விழாவில் கஜகஸ்தான் தூதர் மற்றும் மலேசிய தாய்லாந்து ஜெனரல் கவுன்சில் ஆகியோர் இணைந்து ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பின் தமிழ்நாடு கிளையை துவக்கி வைத்தனர். ஆசிய அரேபிய நாடுகள் இடையே வியாபார வர்த்தக மேம்பாட்டுக்காக 44 நாடுகளில் இந்த கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. தற்போது தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் இந்த கூட்டமைப்பின் கிளை துவக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஆசியா அரேபிய வர்த்தக கூட்டமைப்பின் தேசிய இயக்குனர் கண்ணன் கூறுகையில், இந்தியாவுக்கும் அரேபிய நாடுகளுக்கும் இடையே வர்த்தக நடவடிக்கைகளுக்கான ஒரு பாலமாக அரேபிய வர்த்தக கூட்டமைப்பு செயல்படும். இதன் மூலம் தென்னிந்தியாவில் இருக்கின்ற வர்த்தகர்கள் அரேபிய நாடுகளில் தங்கள் வியாபாரங்களை விரிவுபடுத்த முடியும். அதற்கான ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் இந்த கூட்டமைப்பு வழங்கும்.

தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபிய சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவ இந்த கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் அமைந்தால் தென் தமிழ்நாட்டில் வர்த்தக ரீதியில் வளர்ச்சி ஏற்படும் .அதற்கான திட்டப்பணிகள் விரைவில் துவங்கும். அரேபிய கம்பெனிகளின் கூட்டுறவை மேம்படுத்த இந்தக் கூட்டமைப்பு பேருதவியாக செயல்படும் என தெரிவித்தார்.