நூதன முறையில் தங்கம் கடத்தல்… 1.80 கிலோ தங்கம் பறிமுதல்..

0
Follow on Google News

துபாயில் இருந்து சென்னை வந்த விமான பயணியிடம் ரூ.89.17 லட்சம் மதிப்பிலான 1.80 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாயில் இருந்து, சென்னை வந்த முகமது அஷ்ரப் என்ற பயணியிடம் சுங்க அதிகாரிகள் சோனை நடத்தினர்.

அந்த நபர் முழங்காலுக்கு கீழே இரண்டு பொட்டலங்களை பேண்டேஜ் மூலம் மறைத்து வைத்திருந்தார். அவற்றில் இருந்த 2.07 கிலோ எடையுள்ள தங்க பசையிலிருந்து 1.80 கிலோ தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.89.17 லட்சம். இவை சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில், விமான நிலையத்துக்கு வெளியே ஒருவரிடம் இந்த தங்கத்தை ஒப்படைப்பதற்காக இதை கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

அவரை பிடிப்பதற்காக, முகமது அஷ்ரப் விமான நிலையத்துக்கு வெளியே அழைத்து செல்லப்பட்டார். அவரை சென்னையைச் சேர்ந்த முகமது இப்ராகிம் என்பவர் அணுகினார். அவரைப் பிடித்து விசாரித்ததில் தங்க கடத்தலுடன் தமக்கு தொடர்பு உள்ளதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்தார்.