இதற்கு தி.மு.க.வின் கோயபல்ஸ் பொய் பிரச்சாரமே முழு காரணம்….மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டு

0
Follow on Google News

பெட்ரோல், டீசல் விலையை குறைக்காததால் அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. மக்கள் நலனில் அரசுக்கு அக்கறை கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் மேலும் அமைச்சர் பேசியதாவது:- கடந்த சட்டமன்ற தேர்தலில் 99 படிகளை ஏறி விட்டோம். 100-வது படியில் தான் நாம் வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளோம்.

நமக்கும் திமுகவுக்கும் வெறும் 2 லட்சம் ஓட்டு தான் வித்தியாசம். ஒவ்வொரு முறை நாம் எதிர்க்கட்சியாக வருவதற்கு அதற்கு தி.மு.க.வின் கோயபல்ஸ் பொய் பிரச்சாரமே முழு காரணம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியவர்கள் தற்போது நீட் தேர்வு உள்ளதா இருக்கிறதா என்பதை தற்போது வரை சொல்லவில்லை.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று கூறினார்கள். ஆனால் இன்றைக்கு மதுரை உட்பட 31 மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் குமுறி போய் இருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம், நாங்கள் சொன்னதை செய்யக்கூடியவர்கள் என்று கூறிய ஸ்டாலின் தற்போது 50 நாட்கள் ஆகியும் பிரச்சினையை தீர்க்காமல் இருந்து வருகிறார்.

100 நாட்களில் புதிய தொழிற்சாலையை உருவாக்கி வேலையில்லா திண்டாட்டத்தை குறையுங்கள் என்று நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்துங்கள் என்று நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. தேர்தல் அறிக்கையில் நீங்கள் கூறியுள்ளபடி பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள் என்று தான் கூறி வருகிறோம். அப்படி விலையை குறைக்காமல் தற்போது நழுவ காரணம் என்ன? அரசு உத்தரவிட்டு அரசாணை பிறப்பித்தால் விலை குறையலாம் என்று மக்கள் எண்ணுகின்றனர். அரசாணை வெளியிட்டால் அதை செயல்படுத்த அதிகாரிகள் தயாராக உள்ளனர்.

தற்போது சாத்தியமில்லை என்று சொல்கிறார்கள். ஏன் தேர்தலுக்கு முன்பு சாத்தியமில்லை என்று கூறவில்லை. அதேபோல் நீட் தேர்வில் மழுப்பலான பதிலை கூறுகிறார்கள். தேர்தலுக்கு முன்பு இதை கூறவில்லை. இது மக்கள் நலனில் தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லாததையே காட்டுகிறது. மின்சாரத்துறையில் அனுபவம் வாய்ந்த சில பேர் அமைச்சராக பணியாற்றி உள்ளனர்.

ஆனால் யாரும் அணில் மீது பழி சுமத்தவில்லை‌. நாம் அனில் அம்பானியை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் மின்சாரத்துறை அமைச்சர் மின்வெட்டுக்கு அணில் தான் காரணம் என்று கூறுகிறார். அவர் கூறியது மிகவும் விந்தையாக இருக்கிறது. கடந்த கால தி.மு.க. ஆட்சியில் கடுமையாக மின்வெட்டு இருந்தது. இதை அப்போது அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்துள்ளார். இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.