முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலை மீறி போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய தி.மு.க. ஒன்றிய செயலாளர்.!

0
Follow on Google News

டிரைவரின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததால் ஆத்திரமடைந்த தி.மு.க. ஒன்றிய செயலாளர் நடுரோட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சி வைரலாக பரவி வருவதால் உத்திரமேருர் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஞானசேகரன். இவரது கார் டிரைவர் இரு சக்கர வாகனத்தில் சென்று உள்ளார்.

அப்போது வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசன், ஞானசேகரனின் கார் டிரைவரை நிறுத்தி விசாரணை நடத்தினார். மேலும் இ-பாஸ் இன்றி வந்ததால் அந்த இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த உத்திரமேரூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஞானசேகரன், சம்பவ இடத்துக்கு வந்து உடனடியாக எனது கார் டிரைவரின் இருசக்கர வாகனத்தை விடுவிக்க வேண்டும் என்று காவல் ஆய்வாளர் வெங்கடேசனிடம் தகராறு செய்தார்.

வாகனத்தை விடுவிக்க மறுத்த காவல் ஆய்வாளர் வெங்கடேசனை, ஞானசேகரன் மிரட்டினார். இந்த சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர் தனது மொபைலில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்துள்ளார். காவல் ஆய்வாளரை ஒன்றிய தி.முக. செயலாளர் மிரட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருவதால் காவல்துறையினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

காவல்துறையினரின் செயல்பாடுகளில் எக்காரணம் கொண்டும் தலையிடக்கூடாது. தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.க.வினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். இந்த அறிவுறுத்தலை மீறி உத்திரமேரூர் ஒன்றிய தி.மு.க. செயலாளளர் ஞானசேகரன், போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டியது சமூக வலைதளத்தில் பரவி வருவது கண்டு காவல்துறையினர் கொந்தளிப்பு அடைந்துள்ளனர்.