இன்னோரு சாதிக் பாட்ஷாவா.? எந்த நேரமும் அப்ரூவராக இருந்த நிலையில் டாக்டர். அருண் மர்ம மரணம்.?

0
Follow on Google News

2002-ம் ஆண்டில் ‘வாசன் ஐ கேர்’ என்ற பெயரில் திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் கண் மருத்துவமனைகள் வரிசையாகத் தொடங்கப்பட்டன. டாக்டர் அருண் என்பவர்தான் இதன் உரிமையாளர். மதுரையில் இதன் கிளைகள் தொடங்கப்பட்ட விழா, மதுரைக் கல்லூரி மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. அப்போது அதில் கலந்துகொண்டு திறப்பு விழாவை நடத்தி வைத்தவர், ப.சிதம்பரம்தான். அதன்பிறகு, 2004-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அதன்பிறகு, 2008-ம் ஆண்டு வரை எந்த வளர்ச்சியும் இல்லாத நிறுவனமாகத்தான் வாசன் கண் மருத்துவமனை இருந்தது. ஆனால், 2008-க்குப் பிறகு அந்த நிறுவனம் வேகமாக வளரத் தொடங்கியது. 2009-ம் ஆண்டு அதன் முதலீடு 16 கோடியில் இருந்து 2015-ம் ஆண்டு 500 கோடியைத் தாண்டியது என கூறப்படுகிறது.

2011-ம் ஆண்டு வாசன் கண் மருத்துவமனையின் 100-வது கிளை அன்றைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் தொகுதிக்குள் காரைக்குடியில் திறக்கப்பட்டது. அந்த விழாவில் கலந்துகொண்டு வாசன் கண் மருத்துவமனையின் 100-வது கிளையைத் திறந்து வைத்தவர் அன்றைய இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்-தான். ஒரு தனியார் மருத்துவமனையின் உள்ளூர் கிளையைத் திறக்க இந்தியப் பிரதமரே வந்திருந்தது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. அன்றில் இருந்து வாசன் மருத்துவமனை கார்த்தி சிதம்பரத்தின் மருத்துவமனையாகத்தான் எல்லோராலும் பார்க்கப்பட்டது.

இந்நிலையில் 2015ஆம் ஆண்டு சென்னை மத்திய வருமானவரித் துறை ஆணையர் எம்.சீனிவாச ராவ், டெல்லியில் உள்ள மத்திய தீர்ப்பாயத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். தன்னைப் பழிவாங்கும் நோக்கத்துடன் அதிகாரிகள் தனக்குத் தேவையில்லாமல் பணியிடமாற்ற உத்தரவு வழங்கி உள்ளனர். அதை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதில் தன்னை பணியிடமாற்றம் செய்ய என்ன காரணம் என்பதையும் சீனிவாச ராவ், தெளிவாக விவரித்திருந்தார்.

அதில் ‘‘மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பி.ஜே.பி. அரசாங்கம் அமைந்ததும், கறுப்புப் பணத்துக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பல நிறுவனங்கள் கடுமையான கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டன. அதில் ஜே.டி.குழுமம் என்ற நிறுவனம் சிக்கியது. உடனடியாக அந்த நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, ஏராளமான ஆதாரங்களைக் கைப்பற்றினர். அந்த ஆதாரங்களை முதல் கட்டமாகப் பரிசீலித்த போது, ஜே.டி. குழுமம் தமிழகத்தில் புகழ்பெற்ற வாசன் கண் மருத்துவமனையுடன் பல பணப் பரிவர்த்தனைகள் நடத்தி இருப்பது தெரிந்தது. குறிப்பாக 40 கோடி ரூபாய் கறுப்புப் பணப் பரிவர்த்தனையிலும் 19 கோடி ரூபாய் வரி ஏய்ப்பிலும் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து சோதனையை தீவிரப்படுத்தியதில், அந்த நிறுவனம் 223 கோடி ரூபாய் கறுப்புப் பணமாக வாசன் கண் மருத்துவமனை நிறுவனத்துக்குக் கொடுத்துள்ளது தெரியவந்தது. ஆனால், இந்த ஆதாரங்கள் சிக்கியும்கூட, வருமான வரித் துறையில், ப.சிதம்பரம் அமைச்சராக இருந்த காலத்தில் உயர் பதவிக்கு வந்தவர்கள் சிலர் கூட்டாகச் சேர்ந்து அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் வேலையைச் செய்தனர். இதையடுத்து, நான் ஜே.டி.குழுமத்தின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அந்த நிறுவனத்திடம் இருந்து கறுப்புப் பணம் பெற்ற வாசன் கண் மருத்துவமனை நிர்வாகத்தை விசாரிக்க வேண்டும்; வாசன் கண் மருத்துவமனையின் உண்மையான உரிமையாளராக உள்ள கார்த்தி சிதம்பரம், அவருடைய தந்தை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரை விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினேன். அதன் காரணமாகத்தான் எனக்கு இந்தப் பணியிடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது” என்று தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மத்தியத் தீர்ப்பாயம், சீனிவாச ராவின் பணியிடமாறுதலுக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், வாசன் கண் மருத்துவமனை நிர்வாகியான டாக்டர் அருணுக்கும் அவருடைய மனைவி மீராவுக்கும் 27 லட்சம் பங்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதுவும் 100 ரூபாய் மதிப்புள்ள பங்குகள், ‘பிரிமியம் பங்குகள்’ என்ற அடிப்படையில், 200 ரூபாய் விலையில் கொடுக்கப்பட்டுள்ளன. மூன்று லட்சம் பங்குகள் துவாரகநாதன் என்பவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பங்குகளைப் பெற்ற இவர்கள், அடுத்த 48 மணி நேரத்தில் அதாவது அக்டோபர் 30-ம் தேதி, அவற்றை மீண்டும் நூறு ரூபாய் விலையில், ‘அட்வான்டேஜ் ஸ்டிராட்டஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்துக்கு விற்றுள்ளனர். அங்கிருந்து ‘அஸ்பிரிட்ஜ் ஹோல்டிங்க்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்’ என்ற நிறுவனத்துக்கு கைமாறி உள்ளன. அதன்மூலம் மறைமுகமாக கார்த்திக் சிதம்பரத்துக்கு லாபம் சென்றுள்ளது. இதுதான் சீனிவாச ராவ் சொல்லும் குற்றச்சாட்டு. இதன்மூலம் விதிமுறைகளை மீறி, ஒருவர் மூலம் மற்றொருவர் ஆதாயம் அடைந்துள்ளனர் என்பதுதான் சீனிவாச ராவின் குற்றச்சாட்டு.

இந்நிலையில் வாசன் ஐ கேர் குழுமத்தின் தலைவர் மருத்துவர் ஏ.எம்.அருண் நேற்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த நிலையில் திடீரென அருணின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் அருண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து சந்தேக மரணமாக சென்னை தேனாம்பேட்டை போலீசார் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பாஜக மாநில ஐடி பிரிவு தலைவர் CTR நிர்மல் குமார் தனது டிவீட்டர் பக்கத்தில், எந்த நேரமும் அப்ரூவராக மாறுவார் என எதிர்பார்க்கப்பட்ட‌ நிலையில் ஏ.எம்.அருண் மர்மமான முறையில் இறந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாகவும், மேலும் இன்னொரு சாதிக் பாட்ஷாவா.? என சந்தேகங்களை எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.