செட்டப் செய்து போடப்பட்ட மனுவை கூட சரியாக படிக்க தெரியாத ஸ்டாலின்.!தி.மு.க. என்றாலே மக்களுக்கு அலர்ஜி.!

0
Follow on Google News

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர், திருக்குறுங்குடி, மாவடி ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை வருமாறு:- தி.மு.க. தலைவர் ஸ்டாலின் செல்லுமிடம் எல்லாம் அண்ணா தி.மு.க ஆட்சியில் எதுவுமே நடைபெறவில்லை என்று அவதூறு பரப்பி வருகிறார். நான் அண்ணா தி.மு.க ஆட்சியில் எவ்வளவு திட்டங்களை செயல்படுத்தினோம் என்று பட்டியலிட்டேன். இதில் ஏதும் தவறு இருந்தால் கூறுங்கள். கூறவே முடியாது. இப்போது ஸ்டாலின் திண்ணையில் பெட் சீட்டை போட்டு அமர்ந்து கொண்டு, 10 பேரை பேச வைத்துக் கொண்டு, ஒரு பெட்டியை வைத்துக் கொள்கிறார்.

அதில், உங்களுக்கு ஏதாவது குறை இருந்தால் கூறுங்கள். மனுவை பெட்டியில் போடுங்கள் என்று கூறி வருகிறார். அதிலும் இரண்டு பெட்டி வைத்திருப்பதாக கூறுகிறார்கள், 10 பேரை செட்டப் செய்து வைத்துக் கொண்டு, அதில் ஏற்கனவே மனுவை போட்டு வைத்துக் கொண்டு, என்ன கேள்வி கேட்க வேண்டும், என்ன பதில் சொல்ல வேண்டும் என்று செட்அப் செய்துதான் வருகிறார்கள். அங்கு போடப்படுகின்ற மனுவை பிரித்து படிப்பதில்லை, ஏற்கனவே செட்டப் செய்து போடப்பட்ட மனுவை தான் எடுத்து படிக்கிறார். அதைக்கூட சரியாக வைத்து படிப்பது கிடையாது.

இதை எதற்காக சொல்கிறேன் என்றால், இது மக்களை ஏமாற்றுகின்ற நாடகம். ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக இருந்த போது மக்களிடத்திலே குறைகேட்டு, அதை நிறைவேற்றி இருந்திருக்கலாம். தி.மு.க எத்தனை முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள். அப்போது நாட்டு மக்களை கண்டு கொள்ளவில்லை. அதனால் மக்கள் அவர்களை மறந்து விட்டார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது மக்களிடம் குறைகேட்காத கட்சி திராவிட முன்னேற்ற கழக கட்சிதான். ஆனால், நாங்கள் அப்படி அல்ல.

தி.மு.க. போல மனு வாங்கி ஏமாற்றுகின்ற நாடகம், எங்கள் கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி கிடையாது. இதே போல 2019 நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு முன்பாக ஒவ்வொரு திண்ணையிலும் அமர்ந்து மனு வாங்கினார். அந்த மனு எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை. தேர்தல் வரும்போது இப்படியெல்லாம் நாடகம் போட்டு, மக்களை திசை திருப்பி அதன் மூலம் வெற்றியை பெறுவது திராவிட முன்னேற்ற கழக கட்சி. ஆனால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்னென்ன வாக்குறுதிகளை கொடுக்கின்றதோ அதை எல்லாம் நிறைவேற்றுகின்ற கட்சி.

2011-ல் அம்மா அவர்கள் தேர்தல் அறிக்கையில், நான் முதலமைச்சராக ஆனவுடன் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்தார்கள், அதைக் கொடுத்தார். திராவிட முன்னேற்றக் கழகமும் 2006-ம் ஆண்டு வாக்குறுதி கொடுத்தார்கள், என்ன ஆயிற்று? நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக சொன்னார்கள், இந்த ராதாபுரம் தொகுதியில் எவ்வளவு பேர் நிலம் வாங்கியிருக்கிறீர்கள்? ஒன்றுமே கொடுக்கவில்லை.

சட்டமன்றத்திலே அண்ணா தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாநிதியிடம் இது குறித்து கேட்டார்கள். உங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை போல நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக, எங்கே என்று கேட்ட பொழுது, கருணாநிதி கையளவு நிலம் இருந்தாலும் மக்களுக்கு கொடுப்பேன் என்று, கடைசி வரைக்கும் அதையாவது காட்டினார்களா, அதுவும் இல்லை. 2 ஏக்கர் நிலம் கொடுக்க முடியுமா? எங்கு இருக்கிறது? எவ்வளவு பொய், மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் தி.மு.கவினர் என்பதை எண்ணிப் பாருங்கள் என்பதற்காக இதை குறிப்பிடுகின்றேன்.

நிலம் கொடுக்காவிட்டால் போகிறது, மக்களிடத்திலிருந்து நிலத்தை திமுகவினர் பிடுங்காமல் இருந்தாலே போதும். அப்படியிருந்தாலே மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள். தி.மு.க.காரர்கள் என்றாலே மக்களுக்கு அலர்ஜி, ஏன் என்றால் அப்படிப்பட்ட கட்சி தி.மு.க. இந்தியாவிலே பல மாநிலங்கள் இருந்தாலும் இன்றைக்கு அமைதிப்பூங்காவாக விளங்கும் மாநிலம் தமிழ்நாடு. இதை நாங்கள் கூறவில்லை. இந்தியா டுடே என்ற ஆங்கில நாளிதழ் இந்தியா முழுவதும் ஆய்வு செய்து சட்டம்- ஒழுங்கை பேணிக்காப்பதில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்று விருது வழங்கியுள்ளது.

நீங்கள் என்ன விருது வாங்கினீர்கள், ஒன்றும் கிடையாது. நல்லது செய்தால் தானே விருதுகள் வாங்க முடியும். உங்கள் வீட்டை பார்த்துக் கொள்ளவே உங்களுக்கு நேரம் சரியாய் போய்விட்டது. நாட்டு மக்களை எங்கே பார்த்தீர்கள். அண்ணா திமுக ஆட்சி எப்படி, திமுக ஆட்சி எப்படி என்று சிந்தித்து பாருங்கள்.இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.