எனது உறவினர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியது மன்னிக்க முடியாத துரோகம்..! உண்மையை போட்டு உடைத்த சசிகலா.!

0
Follow on Google News

2011 ஆம் ஆண்டு தனக்கு எதிராக சதி திட்டம் தீட்டியதாக சசிகலா , TTV தினகரன் உட்பட சசிகலா குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து வெளியேற்றியும்,அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியும் அதிரடி உத்தரவு பிறப்பித்தார், இதன் பின் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு ஜெயலலிதவுக்கு சசிகலா எழுதிய மன்னிப்பு கடிதம், இன்று ஜெயலலிதா பிறந்த தினத்தில் வைரலாகி வருகிறது, அந்த கடிதத்தில் சசிகலா கூறியிருப்பதாவது.

‘‘என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர், நான் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததை அடிப்படையாக வைத்து, எனது பெயரை தவறாகப் பயன்படுத்தி, சில விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர் என்பதையும், அதனால் கட்சிக்கு பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டன என்பதையும், அவர்களின் தவறான நடவடிக்கைகளால் பல குழப்பங்கள் உண்டாக்கப்பட்டன என்பதையும், கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டது என்பதையும், அக்காவுக்கே எதிரான சில சதித்திட்டங்களும் தீட்டப்பட்டன என்பதையும் அறிந்தபோது நான் பெரிதும் அதிர்ச்சியுற்றேன். மிகுந்த வேதனை அடைந்தேன்.

இவையெல்லாம் எனக்கு தெரியாமல் நடந்தவை என்பதுதான் உண்மை. சந்தித்த நாள் முதல் இன்றுவரை, அக்கா நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு வினாடியும் நான் நினைத்திருக்கிறேனே தவிர கனவிலும் நான் அக்காவுக்குத் துரோகம் நினைத்ததில்லை. என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு அக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் செய்தது மன்னிக்க முடியாத துரோகம்.

அக்காவுக்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எனக்கும் வேண்டாதவர்கள்தான். இவ்வாறு அக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு அவருக்குத் துரோகம் புரிந்தவர்களுடனான தொடர்புகளை நான் துண்டித்துவிட்டேன். அக்காவுக்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், இனிமேல் அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை.

என்னைப் பொறுத்த வரை, அரசியலில் ஈடுபட வேண்டும் என்றோ, கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்கவேண்டும் என்றோ, சட்டமன்ற- நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்றோ, அமைச்சர் பதவியை அடைய வேண்டும் என்றோ, ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றோ எனக்குத் துளியும் ஆசையில்லை. பொதுவாழ்வில் பங்கு பெற வேண்டும் என்ற விருப்பமே எனக்கில்லை. அக்காவுக்கு உண்மையான தங்கையாக இருக்கவே நான் விரும்புகிறேன்.

என் வாழ்க்கையை ஏற்கெனவே அக்காவுக்கு அர்ப்பணித்து விட்டேன். இனியும், எனக்கென வாழாமல் அக்காவுக்காக என்னால் இயன்ற அளவுக்குப் பணி செய்து அக்காவுக்கு உதவியாக இருக்கவே நான் விரும்புகிறேன்’’ என சசிகலா ஜெயலலிதாவுக்கு எழுதிய மன்னிப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .