அடுத்தடுத்து 5 புயல்களை தாக்க இருப்பதாக வரும் செய்தி உண்மையா.? அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்.!

0
Follow on Google News

அடுத்தடுத்து 5 புயல்களை தாக்க இருப்பதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை எனவும், சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகிழக்கு பருவமழையை சேமிப்பது மற்றும் அதன் விளைவுகளை எதிர்நோக்குவது குறித்து அதிகாரிகளுடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை துறையின் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கடந்த அக்டோபர் 28-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை பொழிந்து வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 8 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது. 8.12.2020 வரை இயல்பான மழையளவு 390.3 மி.மீ. ஆனால் தற்போது வரை 420.8 மி.மீ. அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 8 விழுக்காடு அதிகம். 11 மாவட்டங்களில் அதிக அளவில் மழையும் 20 மாவட்டங்களில் இயல்பான மழையும், ஈரோடு, கன்னியாகுமரி, நாமக்கல், நீலகிரி, சேலம், திருச்சி ஆகிய 6 இயல்பை விட மாவட்டங்களில் குறைவாகவும் பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 7 செ.மீ., கடலூர் மற்றும் ஒட்டன்சத்திரத்தில் 4 செ.மீ.மழையும், திருக்கழுக்குன்றம், பெரம்பலூர், வந்தவாசி, காட்டுமன்னார் கோயில் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகி யுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட கடலூர், நாகப்பட்டினம், சிதம்பரம் பகுதியில் முதல்வர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

தமிழகம் முழுவதும் 14,144 பாசன ஏரிகளில் 3982 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அரியலூர், கடலூர், திருச்சி, சேலம் உள்ளிட்டமாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்தியக்குழுவினர் முதல்வரை சந்தித்தனர். பாதிப்புகளை ஆய்வு செய்து முதல்வரும் கோரிக்கையை வைத்துள்ளார். மத்திய குழுவினரிடம் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விளக்கினோம்.

சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து 5 புயல்கள் தாக்க உள்ளதாக புயல்களுக்கு பெயரும் வைத்து ஆதாரமற்ற தகவல்களை பரப்புகிறார்கள். ஆகவே இதுபோன்ற பொய்யான ஆதாரமற்ற தகவல்களை கண்டு அச்சம் கொள்ள தேவையில்லை. வானிலை ஆய்வு மையம் உரிய தகவல்களை வெளியிடுவார்கள். பேரிடர் காலங்களில் இதுபோன்ற பொய் தகவல்களை ஏற்கனவே எச்சரித்துள்ளோம். இதுபோன்ற வதந்திகளை பரப்புபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

40 மணி நேரம் பாம்பனில் நிலை கொண்டிருந்த புயல் முற்றிலும் கரை கடந்தது. புயலில் ஈரப்பதம் இருக்கும் வரை மழை பொழிவு இருக்கும். புரெவி புயல் சேதங்கள் குறித்து விரைவில் கணக்கெடுப்பு தொடங்கும். கணக்கீடு செய்யப் படுகிறது. முழுமையாக தண்ணீர் வற்றிய பிறகு முழுமையாக கணக்கீடு செய்யப்பட்டு நிதி கோரப்படும். பொது மக்கள் நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். செல்பி மோகத்தை நீர்நிலைகளில் காண்பிக்க வேண்டாம். அது ஆபத்தில் முடிந்து விடும். மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 7605 ஏரிகளில் 1602 முழுகொள்ளளவை எட்டியுள்ளது மகிழ்ச்சி தருகிறது. இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.