டெல்லியில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அலுவல் மொழியான ஹிந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக கருத வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல என குறிப்பிட்ட அமித்ஷா.
மேலும் வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும் என மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்தார். இதற்கு தமிழ்நாட்டில் ஒரு சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து இது குறித்து தெரிவிக்கையில்,
வடக்கே வாழப்போன தமிழர் இந்தி கற்கலாம், தெற்கே வாழவரும் வடவர் தமிழ் கற்கலாம், மொழி என்பது
தேவை சார்ந்ததே தவிர திணிப்பு சார்ந்ததல்ல, வடமொழி ஆதிக்கத்தால் நாங்கள் இழந்த நிலவியலும் வாழ்வியலும் அதிகம், இதற்குமேலும் இந்தியா? தாங்குமா இந்தியா? என உள்த்துறை அமைச்சர் அமித்ஷா ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை கருத வேண்டும் என தெரிவித்ததை இந்தியை திணிப்பது போன்று வைரமுத்து கருத்து தெரிவித்திருந்தார்.
வைரமுத்துவின் இந்த கருத்துக்கு பதிலடி தரும் விதத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் தெரிவித்ததாவது, பிறகு ஏன் ஆங்கிலம் கற்கிறார்கள் மிஸ்டர் வைரமுத்து? இங்கிலாந்து சென்று வாழப் போகிறீர்களா? தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் உள்ள குழந்தைகள் எல்லாம் ஆங்கிலம் கற்று வருகிறார்களே என்ன காரணம்….அவர்கள் ஐரோப்பாவிற்கு செல்ல போகிறவர்கள் என்பதனாலா?
திரை கீதத்தில் நீங்கள் வல்லவர் தான் … தேசிய கீதம் எழுத முயற்சிக்க வேண்டாம்.. ஹிந்தி கற்றுக் கொண்ட தெலுங்கன் மலையாளி கன்னடன் தங்கள் மொழிகளை பண்பாட்டை விட்டு விடவில்லையே? தமிழ் தமிழ் என்று சொல்லி நீங்கள் தமிழை வாழ வைத்திருக்கிறீர்களா? இல்லை….தமிழால் நீங்கள் வாழ்ந்து இருக்கிறீர்கள். பக்கத்தில் இருக்கும் பாண்டிச்சேரியில் தமிழன் ஹிந்தி படிக்கிறான்.. அங்கே தமிழை அழித்து விட்டானா? என பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன்.