சும்மா இருப்பதும் இது ‘‘அம்மா அரசு” என்பதையா காட்டுகிறது? இனியும் காலந்தாழ்ந்துவிடாது.!கி.வீரமணி ஆவேசம்.!

0
Follow on Google News

பேரறிவாளன் உட்பட ஏழு பேரை உச்சநீதிமன்றம் கூறியும், தமிழக அமைச்சரவை தீர்மானித்தும் ராஜீவ் கொலை வழக்கு – ஏழு பேரை விடுவிக்க ஆளுநர் காலதாமதம் செய்வது ஏன்? என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார், மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, உச்சநீதிமன்றத்தலைமை நீதிபதியின் தலைமையிலான அமர்வு 18.2.2014அன்று வழங்கிய தீர்ப்பில், அரசமைப்புச் சட்டம் 161, CrPC 432, 433 ஆகியவற்றின்கீழ், மாநிலஅரசுக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, பேரறிவாளன் உள்ளிட்ட மூவரை விடுதலை செய்யலாம் என்றும் அறிவுறுத்தியது

பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு, மூன்று நீதிபதிகள் அமர்வுமுன் விசாரணைக்கு வந்தபோது(4.11.2020), அந்த அமர்வு ஒரு முக்கிய சட்டப் பிரச்சினையைத் தெளிவுபடுத்தி, ஆளுநர் இவர்களை விடுதலை செய்வதில் எந்தத் தடையும் இல்லை என்று தெளிவாகக் கூறிவிட்டது!

ஆளுநர் காலதாமதம் செய்வது என்பது அரசமைப்புச் சட்டப்படி இயங்கும் நிர்வாகத் துறை (Executive), நீதித்துறை (Judiciary S.C.), சட்டமன்றம் (Legislative) அதில் அறிவிக்கப்பட்ட அரசு முடிவு ஆகிய மூன்று முக்கிய துறைகளையும்பற்றி கவலைப்படாது, புறந்தள்ளும் அலட்சியம் ஆகும்! இது சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல. இனியும் நியாயப்படுத்த முடியாத, காலதாமதம் செய்யக் கூடாத ஒன்றாகும்!

மோகன் பராசரன் போன்ற அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு சட்டவல்லுநர் – மூத்த வழக்குரைஞர் கருத்தையும்கூட ஆளுநர் உதாசீனப்படுத்திடுவதும், தமிழகஅரசும் சட்ட ரீதியாகவும், நியாயப்படியும் இதில் மேலும் அழுத்தம் தராது, சும்மா இருப்பதும் இது ‘‘அம்மா அரசு” என்பதையா காட்டுகிறது? இனியும் காலந்தாழ்ந்துவிடாது – எழுவர் விடுதலையை உடனடியாக செயல்படுத்தட்டும்! “தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி” என்பதை அறியாதவர்களா ஆட்சியாளர்களும், ஆளுநரும்?” என்ற கேள்வி எங்கும் எதிரொலிக்கிறது என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.