திமுக எனும் தேன்கூட்டில் கை வைக்க வேண்டாம்.!மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.!

0
Follow on Google News

“அரசியலுக்கு வருவதற்கு முன்னால் தலைமறைவாக இருந்ததாகக் கூறப்படும் முதல்வர் பழனிசாமி மீண்டும் தலைமறைவாகும் காலம் வெகுதொலைவில் இல்லை; திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது; திமுக எனும் தேன்கூட்டில் கை வைக்க வேண்டாம்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார், அவர் வெளியிட்டுள்ளார் அறிக்கையில்.

சிறுவயது முதலே கடினமாக உழைத்தேன் என்று எடப்பாடி பழனிசாமி அடிக்கடி சொல்கிறார். இதை ஸ்டாலினிடம் நான் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று சொல்லி இருக்கிறார் பழனிசாமி.
முதலமைச்சர் அவர்களே! என்னிடம் நீங்கள் நிரூபிக்க வேண்டியது இல்லை! நெடுங்குளம் சோமசுந்தரம், கருப்பண்ணக் கவுண்டர், துரை ஆகிய மூவரது சமாதியில் போய் நின்று கொண்டு, ‘நான் சிறுவயது முதலே கடினமாக உழைத்து முன்னுக்கு வந்தேன்’ என்று சொல்ல முடியுமா? இதனை நான் சவாலாகக் கேட்கிறேன். இதற்கு மேல் அந்த விவகாரத்துக்குள் போக விரும்பவில்லை.

படிப்படியாக முன்னேறினேன் என்கிறார் பழனிசாமி. அவர் படிப்படியாக முன்னேறினாரா, உருண்டு உருண்டு போய் முன்னேறினாரா என்பதைத் தமிழ்நாடே பார்த்துச் சிரித்தது. சிரித்துக் கொண்டு இருக்கிறது. வாழ்நாளெல்லாம் சிரிக்கத்தான் போகிறது. ‘எனக்குத் தொழில் விவசாயம்’ என்கிறார் பழனிசாமி. இல்லை, பழனிசாமிக்குத் தெரிந்த ஒரே தொழில் துரோகம்! பழனிசாமியின் துரோகப் படலத்துக்குச் சாட்சி வேண்டுமானால் – செங்கோட்டையனிடம் கேளுங்கள். அவரை வளர்த்துவிட்ட கோபால், சண்முகம், எடப்பாடி மணி, எடப்பாடி பெருமாள் ஆகியோரைக் கேளுங்கள்!

சசிகலாவைக் கேளுங்கள்! தினகரனைக் கேளுங்கள்! துரோகப் படலங்களைப் பக்கம் பக்கமாக எழுதலாம்!
படிப்படியாக முன்னேறியவர் அல்ல பழனிசாமி, எல்லாப் படியிலும் தவறி விழுந்தவர் இந்த பழனிசாமி. 1990-ஆம் ஆண்டு சேலம் மாவட்டச் செயலாளரான பழனிசாமியின் பதவியை சில ஆண்டுகளிலேயே ஜெயலலிதா பறித்தார். சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் பதவி பழனிசாமிக்குத் தரப்பட்டது. சில ஆண்டுகளில் அதுவும் பறிக்கப்பட்டது. 2003-ஆம் ஆண்டு சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆனார் பழனிசாமி. சில ஆண்டுகளில் அந்தப் பதவியும் ஜெயலலிதாவால் பறிக்கப்பட்டது. 2008-இல் மீண்டும் பதவி தரப்பட்டது. அது மீண்டும் பறிக்கப்பட்டது.

2011-ஆம் ஆண்டு சசிகலா குடும்பத்தோடு மொத்தமாக நெருக்கமானதால் தான் அ.தி.மு.க.வின் ஐவர் அணியில் அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அதனால் தான் பன்னீர்செல்வத்தை விட இவர் நம்பிக்கையானவராக இருப்பார் என்று சசிகலா குடும்பம் நம்பி முதலமைச்சர் பதவியைக் கொடுத்தது.
துரோகத்தையே வாழ்க்கையாகக் கொண்ட பழனிசாமி, இறுதியாக சசிகலா குடும்பத்துக்கும் துரோகம் செய்தார். பங்காளிகளுக்குச் செய்த துரோகத்தில் வாழ்க்கையைத் தொடங்கி – அரசியல் துரோகத்தால் பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கும் பழனிசாமிக்கு என்னைப் பற்றிப் பேச எந்த யோக்கியதையும் இல்லை.

நல்ல எண்ணம் – தீய எண்ணம் என்பதைப் பற்றி எல்லாம் பழனிசாமி எனக்குப் பாடம் எடுக்க வேண்டியது இல்லை. அதற்கான அருகதையும் அவருக்கு இல்லை. ‘பதவி வரும் போது பணிவு வர வேண்டும்’ என்பார்கள். ஆனால் பழனிசாமியிடம் பணிவும் இல்லை. பயமும் இல்லை. பொறுப்பும் இல்லை. தனது தகுதிக்கு மீறிய ஒன்று கஷ்டப்படாமல் கிடைத்துவிட்டது என்ற மமதையில் தலைகால் தெரியாமல் ஆடிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. கை சுத்தமும் இல்லை, வாய் சுத்தமும் இல்லை. பணத்துக்காகவும், பணம் வரும் திட்டங்களை மட்டுமே செய்யக் கூடியவராக இருக்கிறார் பழனிசாமி.

தன்னை யாரும் கேள்வி கேட்க முடியாது, கேள்வி கேட்கக் கூடாது என்ற ஆணவத்திலும் இருக்கிறார். இந்த இரண்டுமே மக்களுக்கு விரோதமானது. ஜனநாயக விரோதமானது. பணத்துக்காக மட்டும் எதையும் செய்பவர்கள் கூலிப்படைக்காரர்களாக இருக்கலாமே தவிர, அரசியல்வாதிகள் அல்ல. தன்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று நினைப்பவர்கள் சர்வாதிகாரிகள். இது ஜனநாயகத்துக்கு முற்றிலும் விரோதமானது.

பழனிசாமிக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள், நீங்கள் என்ன செய்தாலும் தி.மு.க. வெற்றியை தடுக்க முடியாது. இதுவரை எப்படி சும்மா இருந்தீர்களோ அதுபோலவே இந்த கடைசி ஐந்து மாதமும் சும்மா இருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். தி.மு.க. என்ற தேன்கூட்டில் கை வைத்து விடாதீர்கள் என்று எச்சரிக்கை செய்கிறேன். வரப்போகிற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல். அரசியலுக்கு வருவதற்கு முன்னால் சில காலம் காட்டில் தலைமறைவாக இருந்தார் பழனிசாமி என்று அந்த வட்டாரத்து மக்கள் சொல்வார்கள். மீண்டும் அவர் தலைமறைவாகும் காலம் வெகுதூரத்தில் இல்லை என முக ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.