மோடி, அமித்ஷா வருகின்ற விமானத்தில் பண மூட்டைகள்.! முக ஸ்டாலின் பரபரப்பு குற்றசாட்டு.!

0
Follow on Google News

தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசியதாவது, இன்றைக்கு காலையில் ஒரு செய்தியைப் பார்த்து இருப்பீர்கள். என்னுடைய மகள் வீட்டில் இன்றைக்கு சோதனை நடத்தினார்கள். நாளைக்கு என் வீட்டில் நடக்கும். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நீங்கள் சோதனையைத் தொடர்ந்து நடத்துங்கள். அப்போதுதான் தி.மு.க. இன்னும் வலுப்பெறும். தி.மு.க. இன்னும் உணர்ச்சி பெறும். நாங்கள் என்ன அ.தி.மு.க.வா உங்கள் சோதனையைப் பார்த்துப் பயந்து மூலையில் உட்கார்ந்து கொள்வதற்கு?

நாங்கள் பனங்காட்டு நரிகள். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சி விட மாட்டோம். வருமான வரித்துறை சோதனை என்றால் என்ன தெரியுமா? வருமானத்துக்கு மீறி சொத்துச் சேர்த்திருந்தால், அதைக் கணக்கில் காட்டாமல் இருந்தால் சோதனை செய்ய வேண்டும். ஆனால் அவர்கள், தேர்தலுக்காக ஏதோ பணம் பதுக்கி வைத்திருப்பதாக எங்களுக்குச் செய்தி கிடைத்தது. அதனால் வந்தோம் என்று இறுதியாக சொல்லப் போகிறார்கள்.

இதுவரைக்கும் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நன்றாகத் தேடுங்கள். அதைத்தான் செய்தியாகச் சொல்லப் போகிறார்கள். இப்போது எங்களுக்கு செய்தி கிடைத்திருக்கிறது. என்ன செய்தி என்றால், மோடி வருகின்ற விமானத்தில் பண மூட்டையுடன் வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு தாராபுரத்திற்கு வந்து கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். இப்போது மதுரைக்கு வந்திருக்கிறார். இரவோடு இரவாக வந்திருக்கிறார். அதனால் பண மூட்டையுடன் வந்திருக்கிறார்.

நாளைய தினம் அமித்ஷா வரப்போகிறார். அவரும் பண மூட்டையுடன் வரப்போகிறார் என்று நாங்கள் சொல்லுகிறோம். வருமான வரித்துறையினருக்கு, நேரடியாக அவர்கள் வரும் விமானத்திற்குச் சென்று சோதனை செய்வதற்கு தைரியம் இருக்கிறதா? பிரதமருக்கு ஒரு சட்டம். ஸ்டாலினுக்கு ஒரு சட்டமா? என்று நான் கேட்கிறேன். அவர் இந்த நாட்டின் பிரதிநிதிதான், நானும் இந்த நாட்டின் பிரதிநிதிதான். எப்படியாவது ஐந்தாறு சீட்டாவது வென்று விடலாம் என்று பா.ஜ.க. நினைத்துக் கொண்டிருக்கிறது.

நான் சொல்கிறேன், நீங்கள் ஒரு சீட் கூட வெற்றி பெற முடியாது. மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இது தமிழ்நாடு. தந்தை பெரியார் பிறந்த மண் – பேரறிஞர் அண்ணா பிறந்த மண் – தலைவர் கலைஞர் வாழ்ந்த மண். இது திராவிட மண். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மோடி அவர்களே… அமித் ஷா அவர்களே… உங்களுடைய மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது. மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என திமுக தலைவர் முக ஸ்டாலின் பிரச்சாரத்தில் பேசினார்.