அ.தி.மு.க. ஆட்சி இந்த நாட்டையே குட்டிச்சுவராக்கி இருக்கிறது.!234-க்கு 234 தொகுதிகளை திமுக கைப்பற்றும், ஸ்டாலின் நம்பிக்கை.!

0
Follow on Google News

“சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் 19-வது இடம் பிடித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி தனது தோல்விகளை மறைக்க அரசாங்க நிதியில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்கிறார்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார், மேலும் அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சி இந்த நாட்டையே குட்டிச்சுவராக்கி இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு, ஒரு பொய்யான பிரச்சாரத்தை, ஆட்சியில் இருக்கக்கூடிய அ.தி.மு.க. செய்து கொண்டிருக்கிறது.

அரசின் சார்பில் விளம்பரங்களைப் பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் கட்சியின் சார்பில் கொடுத்தால் நாம் கேள்வி எழுப்பப் போவதில்லை. கட்சியின் சார்பாக என்ன வேண்டுமானாலும் விளம்பரம் செய்து கொள்ளட்டும். அதைத் தடுக்க விரும்பவில்லை; விமர்சனம் செய்யவும் தயாராக இல்லை. ஆனால் அரசின் செலவில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கென கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு விளம்பரம் செய்ய முடியாது. கட்சியின் சார்பில் விளம்பரம் செய்தாலும் அதற்குக் கணக்குக் காட்ட வேண்டும். எனவே தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே திட்டமிட்டு மக்களை எப்படியாவது மயக்கி விட வேண்டும் – எப்படியாவது ஏமாற்றி விட வேண்டும் என்பதற்காக, இப்படி மக்களின் வரிப்பணமாக இருக்கக் கூடிய அரசுப் பணத்தைச் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் தரக்கூடிய வரிப் பணத்தை வைத்து மக்களுக்கான திட்டங்களைத்தான் தீட்ட வேண்டும்.

அந்த விளம்பரங்களைப் பார்த்தீர்களென்றால், உலகிலேயே இவர்தான் ஏதோ பெரிய சாதனை செய்த மாதிரி – மிகப்பெரிய அளவுக்கு விருதுகளை வாங்கியது போல எல்லாவற்றிலும் முதலிடம் முதலிடம் என்று மக்களை ஏமாற்றுகிற நிலையில் அந்த விளம்பரங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் என்னதான் பிரச்சாரம் செய்தாலும் – குட்டிக்கரணம் போட்டாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஆட்சிக்கு அல்ல; எதிர்க்கட்சியாகக் கூட நீங்கள் வர முடியாத சூழல் தான் நிலவுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, எதிர்வரும் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் நாம் வெற்றி பெறுவோம் என்று கூறியிருந்தேன். இப்போது நாம் மக்கள் கிராமசபைக் கூட்டங்களை உற்சாகத்துடன் நடத்தி, மக்களைத் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கிறோம். மக்களின் மனநிலையைப்ப பார்க்கும்போது, 234-க்கு 234 இடங்களையும் நாம் பெறுவோம் என்ற நம்பிக்கை வருகிறது. இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை.