பாரதியார் பாடலை மேற்கோள் காட்டி புல்வாமா தாக்குதலை நினைவு கூர்ந்த பிரதமர்.!பீரங்கி மையமாக உருவெடுத்து தமிழகம், பிரதமர் பெருமிதம்.!

0
Follow on Google News

தமிழகத்திற்கான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பிரதமர் பேசுகையில், புல்வாமா தாக்குதலை நினைவு கூர்ந்தார், அவர் பேசியதாவது, இந்த நாளை எந்த இந்தியரும் மறக்கமுடியாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் புல்வாமா தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் உயிர் தியாகம் செய்த அனைத்து வீரர்களுக்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம். நமது பாதுகாப்பு படையினர் குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம். இந்தத் துணிச்சல் வரும் தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்.

நண்பர்களே, உலகின் மிகவும் பழமையான மொழியான தமிழில், மகாகவி சுப்பிரமணிய பாரதி கூறினார்.
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்

இதன் பொருள், நாம் ஆயுதங்களையும் செய்வோம், காகிதமும் செய்வோம், தொழிற்சாலைகளையும் உருவாக்குவோம், பள்ளிகளையும் உருவாக்குவோம், நகரும், பறக்கும் வாகனங்களையும் தயாரிப்போம். உலகை அசைக்கும் கப்பல்களைக் கட்டுவோம், என்பதாகும். இந்தத் தொலை நோக்கால் ஊக்கம் பெற்று, இந்தியா, பாதுகாப்பு துறையில் தன்னிறைவை அடையும் மகத்தான முயற்சியை மேற்கொண்டுள்ளது. இரண்டு பாதுகாப்புத் தளவாட வழித்தடங்களில் ஒன்று தமிழகத்தில் வருகிறது.

இந்த வழித்தடம் ஏற்கனவே ரூ. 8,100 கோடிக்கான முதலீட்டு உத்தரவாதங்களைப் பெற்றுள்ளது. இன்று நம் எல்லைகளைப் பாதுகாக்கும் மற்றொரு வீரனை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள அர்ஜூன் முதல் ரக போர் ஊர்தி மார்க் 1-ஏ-வை ஒப்படைப்பதில் நான் பெருமையடைகிறேன். இது உள்நாட்டு வெடி பொருட்களைப் பயன்படுத்தக் கூடியதாகும்.

தமிழகம் ஏற்கனவே, வாகன உற்பத்தியின் மையமாகத் திகழ்கிறது. இப்போது, தமிழகம் இந்தியாவின் பீரங்கி உற்பத்தி மையமாகவும் உருவெடுத்து வருவதை நான் காண்கிறேன். தமிழகத்தில் உருவாக்கப்பட்ட இந்த பீரங்கி நாட்டின், வடக்கு எல்லைகளைப் பாதுகாப்பதில் ஈடுபடுத்தப்படவிருக்கிறது. இது இந்தியாவின் ஒன்றுபட்ட உணர்வைப் பிரதிபலிக்கிறது. நமது ஆயுதப் பாதுகாப்பு படை உலகின் மிகச் சிறந்த நவீனப் படையாக திகழ்வதற்கு நாம் தொடர்ந்து பாடுபடுவோம். அதே சமயம், இந்தியாவை பாதுகாப்புத் துறையில் தற்சார்பு கொண்டதாக உருவாக்குவதில் முனைப்புடன் கவனம் செலுத்துவோம்.

இந்தியாவின் துணிச்சலை பறைசாற்றும் வகையில் நமது ஆயுதப் படைகள் திகழ்கின்றன. நமது தாய்திருநாட்டைப் பாதுகாப்பதில் முழு திறனுடன் உள்ளதை அவர்கள் மீண்டும், மீண்டும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நிரூபித்து வருகின்றனர். இந்தியா அமைதியில் நம்பிக்கை கொண்டுள்ளது என்பதை சமயம் கிடைக்கும் போதெல்லாம் உணர்த்தி வருகின்றனர். அதே தருணத்தில், இந்தியா தனது இறையாண்மையை எப்பாடுபட்டாவது பாதுகாக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் திகழும் நமது படைகளின் தீரம் போற்றுதலுக்குரியது என தெரிவித்தார்.