தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பொது முடக்கம் காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை திறக்கப்படவில்லை. பள்ளிக்கு செல்லாமலேயே மாணவர்கள் ஒரு ஆண்டு படிப்பை முடித்திருந்தனர்.
இதையடுத்து செப்டம்பர் மாதம் 9 முதல் 12 வகுப்புகளுக்கான பள்ளி தொடங்கப்பட்டு இப்போது பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதற்கிடையில் நவம்பர் 1 முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த இரு வாரங்களாக பருவமழைக் காரணமாக அடிக்கடி பள்ளிகளுக்கு விடுப்பு விடும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடக்க இருந்த 10 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மே மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராக கூடுதல் அவகாசம் கிடைக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்படலாம் என தெரிகிறது.