சசிகலா ஒரு சக்தியே கிடையாது. தேர்தலில் தினகரனை வைத்து ஆழம் பார்த்து எவ்வளவு ஓட்டு வாங்கினார்கள்? ஜெயக்குமார் தாக்கு..

0
Follow on Google News

அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- மருத்துவமனையில் உள்ள ஒருவரை சந்திப்பது என்பது ஒரு ஆரோக்கியமான விஷயம். இதற்குள் நான் போக விரும்பவில்லை. உடல்நிலை சரியில்லாதவரை பார்க்க செல்வது தவறு இல்லை. ஆனால் காரில் எப்படி கொடி கட்டிக்
கொண்டு செல்லலாம்? கழகத்துக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

எந்த சம்பந்தமும் இல்லாமல் கழக கொடி எப்படி கட்டிக்கொண்டு செல்ல முடியும். கழக கொடி கட்டி செல்ல அவருக்கு எந்த உரிமையும் கிடையாது. புரட்சித்தலைவர் கட்டி எழுப்பிய கழகம் நன்றாக இருக்க வேண்டும்என்பதற்காக அன்று ஜானகி அம்மாள் நான் அரசியலை விட்டு ஒதுங்கிவிடுகிறேன் என்று பெருந்தன்மையோடு சொன்னார். இதுபோல நீங்கள் ஒதுங்கி செல்லுங்கள். ஏன் குறுக்கீடுகிறீர்கள்? ஏன் குழப்பிவருகிறீர்கள்.

ஏற்கனவே நீங்கள் ஒதுங்கி விடுவதாக சொன்னீர்கள். இதனை செய்தாலே நல்லது. பெருந்தன்மையான விஷயமாக இருக்கும். அவர் ஒரு சக்தியே கிடையாது. தேர்தலில் தினகரனை வைத்து ஆழம் பார்த்தார். எவ்வளவு ஓட்டு வாங்கினார்கள்? தினகரன்,சசிகலாவை பிரித்து பார்க்க முடியுமா? ஒரே ஜெராக்ஸ்தான் இருவரும். அவர்கள் பிரதான சக்தி கிடையாது. கழகத்திற்கு தொந்தரவு தரக்கூடிய எண்ணத்தில் இருந்தால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாகத்தான் பார்க்க முடியும்.

அம்மா அவர்கள் தற்போது இல்லை. அதனால் அவர்கள் எது வேண்டுமானாலும் சொல்வார்கள். ஆனால் மக்கள் நம்ப தயாராக இல்லை. சசிகலா உள்ளிட்ட யார் நினைத்தாலும் கழகத்தை அழிக்க முடியாது. வலுவான எதிர்க்கட்சியாக தமிழகத்தில் நாங்கள் உள்ளோம். இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.