இந்தியர் – இந்துக்கள் என்ற ஒற்றை அடையாளத்தில் தீபாவளி திருநாளை கொண்டாடுவோம்.! Dr.கிருஷ்ணசாமி தீபாவளி வாழ்த்து..

0
Follow on Google News

சாதிய பிணக்குகளையும், வல்லாதிக்க போக்குகளையும் நீக்கி இந்தியர் – இந்துக்கள் என்ற ஒற்றை அடையாளத்தில் தீபாவளி திருநாளை கொண்டாடுவோம்.. என புதிய தமிழகம் கட்சி தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார், மேலும் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலகெங்கும் வாழும் இந்திய-இந்து மக்களுக்கும்; தமிழக மக்களுக்கும்; பட்டியலினம், தாழ்த்தப்பட்டோர் என்ற இருளிலிருந்து மீண்டிட அடையாள மீட்புக்காகவும், அதிகாரப் பகிர்வுக்காகவும் போராடிக் கொண்டிருக்கக்கூடிய இலட்சோபலட்சம் தேவேந்திரகுல வேளாளர்களுக்கும்; புதிய தமிழகம் கட்சியினருக்கும் எனது அன்பு கலந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இந்திய மக்களால் கொண்டாடப்படக்கூடிய இந்துக்களின் மிகப்பெரிய விழா தீபாவளி ஆகும். தீபாவளி திருநாளுக்கு பல்வேறு விளக்கங்கள் சொல்லப்படுவதுண்டு. பொதுவாகத் தீமைகள் ஒழிந்து நன்மைகள் உண்டானதையும், துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பொங்கியதையும், பொய்மையை அழித்து வாய்மை வென்றதையும் அடையாளப்படுத்தக்கூடியது தீபாவளி திருநாள் என்பதே நமது பார்வை.

எல்லா விழாக்களின் பின்புலங்களையும் கட்டுக்கதைகள் என்றோ, மூடநம்பிக்கைகள் என்றோ கடந்து செல்லக் கூடாது. விஞ்ஞானம் வளர்ந்து, ஜனநாயகம் தழைத்துள்ள நிலையிலும்; புதிய புதிய சட்டங்களும், திட்டங்களும் உருவாகியுள்ள இக்காலகட்டங்களிலும்; எவ்வளவோ மறைநூல்கள் நம்மிடையே மலர்ந்து இருப்பினும் சுரண்டுவோர்-சுரண்டப்படுவோர்; ஒடுக்குவோர் – ஒடுக்கப்படுவோர்; பொய்யுரைத்து மட்டுமே வாழ்வோர் – உண்மையை மட்டுமே நாடுவோர்; சண்டியர்த்தனம் செய்து பிழைப்போர் – சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் நோக்கியே பயணம் செய்வோர் என இன்றும் இதுபோன்ற நிலைகள் இருக்கின்றபோது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படிப்பட்ட இன்னல்களையெல்லாம் மக்கள் சந்தித்திருப்பார்கள் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட கொடுமைகளிலிருந்து விடுபட்ட நாட்களை இருளிலிருந்து ஒளி பெற்ற நாளாகத்தானே அம்மக்கள் அக்காலகட்டத்தில் கொண்டாடியிருக்க முடியும்.

இந்து-இந்திய மக்கள் இன்றைய சூழலிலும் உள்ளும், புறமும் உள்ள எத்தனையோ தீமைகளை எதிர்த்துப் போராட வேண்டிய நிலையில் உள்ளனர். ஒவ்வொருவரும் தனித்தனி அடையாளங்களுடன் இருந்தாலும் சாதிய பிணக்குகளையும், வல்லாதிக்க போக்குகளையும் நீக்கி இந்தியர்-இந்துக்கள் என்ற ஒற்றை அடையாளத்தில் அனைவரும் ஓரணியில் திரளும் நாளாகத் தீபாவளி திருநாள் கொண்டாடப்பட வேண்டும்.

கடந்த 9 மாதங்களாக கரோனா என்ற அசுர தாக்குதல் உலகை நிலைகுலையச் செய்தது. இந்தியாவின் பொருளாதாரம் முடங்கிப்போய் உள்ளது. மக்கள் இப்போதுதான் வெளியே வர ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த இருள் சூழ்ந்த நிலையிலிருந்து இந்திய மக்கள் அனைவரும் ஒளி சூழ்ந்த நிலைக்கு வர வேண்டும். நம்மிடையே அன்பும், அறமும் மேன்மேலும் துளிர்விட வேண்டும்; பாரம்பரியப் பண்பாடுகள் வளர்ந்திட வேண்டும்.

கரோனாவின் தாக்குதல் முடிவுக்கு வராத நிலையில் மிகவும் எச்சரிக்கையுடனும்; காற்று மாசுபட்டுச் சுற்றுப்புறச் சூழலைக் கெடுக்காத வண்ணம், அடையாளத்திற்கு ஒன்றிரண்டு பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்தி; கலப்படமற்ற உணவுகளை வீட்டிலேயே தயார் செய்து தீபாவளி திருநாளைக் கொண்டாடவும்; ஒவ்வொருவரும் உற்றார் – உறவினருக்கு மட்டுமின்றி ஏழை எளியோருக்கு இனிப்புகளை வழங்கிடவும் இத்தீபாவளி திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்திட இந்திய – இந்து மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் எனது தீபாவளித்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.