சமீபத்தில் கராத்தே தியாகராஜன் தனியார் தொலைக்காட்சியில் நடத்த ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் தமிழருவி மணியன் குறித்து பேசியது குறித்து தமிழருவி மணியன் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது,தமிழருவி மணியன் தலைவராக இருக்கும் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில், தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் அரசியல் நிலைப்பாடு குறித்து,
கராத்தே தியாகராஜன் அவர்களிடம், ஒரு வினாவை சாணக்கியா அலைவரிசை மூலம் திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் முன்வைக்கிறார். ஊடகங்களில் நெறியாளர்கள் எழுப்பும் வினாக்களுக்கு அறிவார்ந்த, தெளிவான விடைகளைத் தருவது என் வழக்கம் இல்லை என்று மீண்டும் ஒரு முறை தியாகராஜன் நிரூபித்திருக்கிறார். விஜயகாந்த் அவர்களை முதல்வராக முன்னெடுக்கவில்லை என்று தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளார். ஆயினும், அரைத்த மாவையே அரைக்கும் வேலையை செய்திருக்கிறார் தியாகராஜன்.
திட்டக்குழு உறுப்பினராக பதவி வகித்த போது அவருக்கு அரசு வீடு ஒதுக்கப்பட்டது. அவர் பதவியில் இருந்த காலத்திற்கு வாடகை கட்ட வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், அப்போதிருந்தே வாடகை செலுத்தி வருகிறார்; இப்போதும் தொடர்ந்து வாடகை செலுத்தி வருகிறார். கலைஞர் கருணாநிதி அவரது கோபாலபுரத்தில் வீடுகளில் ஒன்றை ஒதுக்கவில்லை. முதல்வர் என்ற அடிப்படையில் அரசு வீட்டைத் தான் ஒதுக்கினார்.
வெளிநாடுகளில் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சிக்கும் நன்கொடையோ, சன்மானமோ பெற்றதில்லை. திருச்சியில் நடந்த மாநாட்டின் மூலம் எந்த விளம்பர வெளிச்சத்தையும் தமிழருவி அவர்கள் தேடிக் கொள்ளவில்லை. மாறாக, அந்த மாநாடு, நீறு பூத்த நெருப்பாக இருந்த தமிழக மக்களின் எண்ண ஓட்டத்தை வெளியே கொண்டுவர ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. தங்களை ஒரு நடிகராக அறிந்த காலத்தில் உங்கள் மீது விமர்சனங்களை நான் கொடுத்திருக்கிறேன் என்று ரஜினி அவர்களிடமே தமிழருவி மணியன் தெரிவித்திருக்கிறார்; ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதும் இதை விளக்கியிருக்கிறார்.
மேயராகப் பொறுப்பு வகித்தவர், பொறுப்புணர்வோடு பேசுவது நலம். வாக்குச்சாவடி குழுக்களை முறைப்படுத்தியதில் தமிழருவி அவர்களின் பங்கை, அறிய வேண்டியவர்கள் அறிவார்கள். தமிழருவி மணியன் அவர்களின் எளிமை குறித்தும் அரசியல் நேர்மை குறித்தும் கராத்தே தியாகராஜன் அவர்களின் நற்சான்றிதழ் எதுவும் தேவையில்லை. என காந்திய மக்கள் இயக்கம் மாநில பொதுச் செயலாளர் பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .