நீண்ட நாட்களாக தொடர்ந்த தேசிய ஜனநாய கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளர் விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிமுக அறிவித்ததில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் கூட்டணி கட்சிகளுக்கு இருந்து வருவதாக செய்திகள் வெளியானாலும் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து அதை ஆதரித்தே பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் பங்குபெறும் தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் பேட்டிகளில் தனது கருத்தை பதிவு செய்து வந்தார்.
இந்நிலையில் தமிழக பாஜக பொறுப்பாளர் CT ரவி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்யலாம் என அறிவித்து நீண்ட நாட்களாக நீடித்த பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்துள்ளார், இதனை தொடர்ந்து பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசனிடம் இது குறித்து நமது தினசேவல் நிருபர் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் கூறியதாவது, நாங்கள் எப்பொழுதும் சொல்லி வருகின்ற கருத்தை தான், இப்போது பாஜக தமிழக பொறுப்பாளர் சிடி ரவி அவர்கள், நீங்கள் புரிந்து கொள்ளும்படி மீண்டும் சொல்லி இருக்கிறார் என்று நினைக்கின்றேன்.
எப்படி பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அவர்களை பாரதிய ஜனதா கட்சி தேர்ந்தெடுத்து, அதை அதிமுக ஏற்றுக் கொண்டதோ, அதேபோன்று அதிமுக அதன் முதல்வர் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும், அதன் கூட்டணி கட்சிகள் பாஜக மற்றும் மற்ற கட்சிகள் அதை ஏற்றுக்கொள்ளும், அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அவர்களை அதிமுக கட்சி அறிவித்துள்ளது, அதை தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொள்ளும் என தெரிவித்த பேராசிரியர்.
மேலும், CT ரவி அவர்கள், பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா அவர்களிடம் இது பற்றி பேசிவிட்டு தான் இதை அறிவித்திருப்பர், ஒரு மாநிலத்தின் பாஜக பொறுப்பாளர் என்பவர் தேசியத் தலைவரின் பிரதிநிதி தான், ஆகையால் இவர் என்ன பேசுகின்றாரோ அது தேசிய தலைவரின் கருத்தாக தான் இருக்க முடியும். முதல்வர் வேட்பாளர் போன்ற கொள்கை ரீதியான விஷயத்தில் தேசிய தலைவரின் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு பாஜக தலைவரும் பேசியிருக்க முடியாது, ஆகையால் இது தேசிய தலைவரின் ஒப்புதல் உடனே திரு CT ரவி அவர்கள் அறிவித்திருப்பர் என்றும்.
மேலும் பாஜக வலிமையாக உள்ள தொகுதிகள் கண்டறியப்பட்டு கூட்டணி கட்சிகளின் தலைமையிடம் அந்த பட்டியல் வழங்கப்படும், பாஜக வளருகின்ற கட்சி , இன்னும் வளரும் எங்களின் வளர்ச்சிக்கு உகந்த தகுந்த இடங்கள் பாஜகவுக்கு கிடைக்கும் என்பது தான் எங்களுடைய நம்பிக்கை, எங்களுடைய பிரதான நோக்கம் அதிமுக- பாஜக ஆகிய இரு கட்சிகளும் ஒற்றைப் புள்ளியில் இணைந்து இருக்கின்றோம்,திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் இதுதான் எங்களுடைய அரசியல் நோக்கம் என சூளுரைத்தார் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன்.