வங்கக் கடலில் கடந்த 24-ந்தேதி உருவான நிவர் புயல் மறுநாள் (25-ந்தேதி) புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கரையை கடந்தது. இந்நிலையில் வங்கக் கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது.இரு தினகளுக்கு முன் இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த புயலுக்கு புரெவி என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் இலங்கை திரிகோணமலைக்கு தென் கிழக்கில் 200 கி.மீ. தொலைவிலும், பாம்பனுக்கு தென்கிழக்கே 420 கி.மீ. மற்றும் குமரிக்கு தென் கிழக்கே 600 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. தற்போது இது மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. நாளை (4-ந்தேதி) பாம்பன்- குமரி இடையே புரெவி புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது மணிக்கு 95 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக குமரி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்ங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து புரெவி புயலால் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தமிழக அரசு பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கையை தொடர்ந்து எடுத்து வருகிறார். அதிக மழை இருக்கும் என அறியப்படும் தென் மாவட்ட பகுதிகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க
உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதலமைச்சர் எடப்பாடி ேக.பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-தமிழக முதல்வருடன் தொலைபேசியில் பேசினேன். புரெவி புயல் காரணமாக மாநிலத்தின் சில பகுதிகளில் நிலவும் சூழல் குறித்து ஆலோசித்தோம். தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களின் நலனுக்காக பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.