திறமை இருந்தும் இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்.? மனம் திறந்து பேசிய தமிழக வீரர் நடராஜன்…

0
Follow on Google News

நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் நடராஜன் பந்துவீச்சில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 15 விக்கெட்களை கைப்பற்றி ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி பிசிசிஐ தேர்வு குழு டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்தது.

இந்த பட்டியலில் நடராஜனின் பெயர் இடம்பெறாதது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இணையம் முழுவதும் நடராஜனை டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யாதது பற்றிய விவாதங்களும் கருத்துக்களும் அதிகம் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சிலர் நடராஜனையை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்று தேர்வு குழுவை வலியுறுத்துகின்றனர்.

இப்படியான சூழலில், யார்க்கர்நாயகன் என்று அழைக்கப்படும் நடராஜன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நடைபெறும் பல்வேறு சுவாரசியமான விஷயங்கள் குறித்தும், t20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தனது பெயர் இடம்பெறாதது குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசன் பற்றி நடராஜன் பேசுகையில்: “இந்த சீசனில் சென்னை மட்டுமின்றி அனைத்து ஸ்டேடியங்களிலும் பனிப்பொழிவு உள்ளது என்று நான் நினைக்கிறேன்.

இதற்கு முந்தைய சீசன்களிலும் பனிப்பொழிவில் பந்து வீசி இருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் பயிற்சியின் போதும் ஈரமான பந்தை தான் பயன்படுத்துவேன். எவ்வளவுதான் பயிற்சி எடுத்தாலும், போட்டியின் போது நாம் கிரிப்பை இழந்தால் யார்க்கர் மிஸ் ஆகும். அந்தப் பந்தில் பேட்ஸ்மேன் சிக்ஸ் அடித்து விடுவார். எனவே பனிப்பொழிவு இருந்தாலும் இல்லையென்றாலும் யார்க்கரை எப்படி துல்லியமாக வீசுவது என்பதில் மட்டுமே எனது முழு கவனமும் இருக்கும்.

இதில் பெரிய ரகசியம் எதுவும் இல்லை” இன்று நடராஜன் தனது பந்துவீச்சு பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் நான் செய்த தவறுகள் என்ன என்பது குறித்து புவனேஸ்வர் குமாருடன் பேசுவேன். இந்த விஷயத்தில் அவர் எனக்கு பக்க பலமாக உள்ளார். அது மட்டுமில்லாமல் ஹைதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் போட்டியின் போது எனக்கு நிறைய சுதந்திரம் தருகிறார்.

சொல்லப்போனால் போட்டியின் போது நான் எனது பிளான் படி செயல்படுவேன். அதில் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால் கேப்டனை அணுகுவேன். என்னை போன்ற பந்துவீச்சாளர்களுடனான அவரது உரையாடல் மிகவும் அற்புதமாக இருக்கிறது. நான் அதிகம் பேச மாட்டேன் என்றாலும் அவர் எனது மைண்ட் செட் குறித்து நன்றாக புரிந்து கொள்கிறார். “கவலைப்படாதே எது நடந்தாலும் நான் இருக்கிறேன்” என்று அவ்வப்போது நம்பிக்கை தரும் வகையில் பேசுவார்” என்று ஹைதராபாத் அணியில் உள்ள வீரர்கள் குறித்தும் நடராஜன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கையில், t20 உலக கோப்பை தொடர்பான இந்திய அணியில் தனது பெயர் செய்யப்படாது குறித்தும் நடராஜன் சில விஷயங்களை பேசி இருந்தார். அதாவது, t20 உலக கோப்பை தொடர்கான அணியில் தனது பெயர் பேசப்பட்டதே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும், அவருக்காக கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்வதாகவும் நடராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் அணியில் இடம்பெறுவதும் இடம்பெறாததும் தன் கையில் இல்லை என்று தெரிவித்த நடராஜன், தற்போது தனது கவனம் முழுக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வெற்றி பெறச் செய்வதில் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் டி 20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் தன்னை தேர்வு செய்யாதது எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்றும், எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும் என்பதை தீர்க்கமாக நம்புகிறேன் என்றும் நடராஜன் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நடராஜன் பெயரை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர் பத்ரிநாத், நடிகர் சரத்குமார் மற்றும் ஏராளமான தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் நடராஜனுக்கு ஆதரவாக பேசி வந்த நிலையில், நடராஜன் இப்படி பேசியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.