ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இவ்விரு அணிகளில் பாகிஸ்தான் கடந்த காலங்களில் இந்தியாவுக்கு எதிராக உலகக் கோப்பை போட்டிகளில் பெரும்பாலும் தோல்விகளை மட்டுமே சந்தித்துள்ளது. போதாக்குறைக்கு இந்த உலகக் கோப்பையில் கத்துக்குட்டியான அமெரிக்காவிடம் முதல் போட்டியில் பாகிஸ்தான் அவமானத் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் விராட் மற்றும் ரோஹித் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடி தங்களை சாம்பியன் வீரர்கள் என்பதை நிரூபித்துள்ளதாக கம்ரான் அக்மல் தெரிவித்தார். அந்த வரிசையில் லேட்டஸ்ட் நட்சத்திரமாக உருவெடுத்துள்ள சூரியகுமார் யாதவ் இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக பெரிய ரன்களை எடுத்தால் மட்டுமே உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் என்பதற்கு அர்த்தம் என்று அவர் சவால் விட்டுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியதாவது, “விராட் கோலி டாப்பில் இருப்பார். இரண்டாவதாக சூரியகுமார் யாதவ். இருப்பினும் பாகிஸ்தானுக்கு எதிராக அவருடைய சிறந்த செயல்பாடு இன்னும் வரவில்லை. ஆனாலும் அவரை இப்போட்டியில் அசத்தக்கூடிய வீரராக நான் தேர்ந்தெடுப்பேன். ரோகித் சர்மா ஏற்கனவே ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக பெரிய ரன்கள் அடித்து தன்னை நிரூபித்தவர். எனவே இது சூரியகுமார் தன்னை நிரூபிப்பதற்கான வாய்ப்பு.
ஒருவேளை அவர் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்தால் பாகிஸ்தானுக்கு எதிராக பெரிய ரன்கள் அடிக்க வேண்டும். இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய போட்டிகளில் அவர் பெரிய ரன்கள் அடிக்கவில்லை. இருப்பினும் மற்ற அணிகளுக்கு எதிராக அசத்தியுள்ள அவர் 360 டிகிரி பேட்ஸ்மேன். அவருடைய பேட்டிங்கை பார்ப்பது நன்றாக இருக்கும். அவர் இந்திய அணியில் தம்முடைய இடத்தை குறுகிய காலத்தில் நிரந்தரமாக்கியுள்ளார்” என்று கூறினார்.
நியூயார்க் நகரில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரின் ஏ பிரிவு 19-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாத்தியமில்லாத வெற்றியை இந்திய அணி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 19 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 120 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் சேர்த்து 6 ரன்களில் தோல்வி அடைந்தது.
ஐசிசி உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி 15-ஆவது முறையாக பாகிஸ்தான் அணியை இதன் மூலம் வென்றுள்ளது. டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 7-ஆவது வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2 போட்டிகளில் 4 புள்ளிகளுடன் 1.455 நிகர ரன்ரேட்டில் குரூப் ஏ பிரிவில் முதலிடத்தில் இருக்கிறது.
இந்த போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் சவால் சவால் விட்டார். இந்த சவாலுக்கு சூரியகுமார் யாதவ் தன்னுடைய பேட் மூலம் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சூரியகுமார் யாதவ் தடுமாறினார். எதிர்கொண்ட எட்டு பந்துகளில் அவர் ஒரே ஒரு பவுண்டரி மட்டும்தான் அடித்தார். மொத்தமாகவே சூரியகுமார் அடித்த ரன்கள் 7 தான். இதன் மூலம் கம்ரான் அக்மல் சவாலில் சூரியகுமார் தோற்று இருக்கிறார்.
இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக 5 போட்டிகளில் விளையாடியுள்ள சூரியகுமார் யாதவ், மொத்தமாகவே 62 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் அவர் அடித்திருக்கும் அதிகபட்ச ஸ்கோர் 18 ரன்கள் ஆகும். சராசரி வெறும் 15 என்ற அளவில் தான் இருக்கின்றது. இந்த ஐந்து இன்னிங்ஸில் சூரிய குமார் யாதவ் வெறும் ஏழு பவுண்டரி ,ஒரு சிக்சர் தான் அடித்திருக்கிறார்.