‘பேர் வச்சாலும்’ பாடலுக்கு திருவள்ளுவர்தான் காரணகர்த்தா: உண்மையை உடைத்த இளையராஜா

0
Follow on Google News

கமல் 4 வேடங்களில் 30 வருடங்களுக்கு முன்பு வெளிவந்து வசூலை வாரிக்குவித்த படம் ‘மைக்கேல் மதன காமராஜன்’. இப்படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியிருந்தார். இளையராஜா இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பயங்கர ஹிட்டானது. குறிப்பாக ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

இந்த பாடல் தற்போது சந்தானம் நடித்த ‘டிக்கிலோனா’ படத்தில் யுவன்சங்கர் ராஜாவால் ரீமிக்ஸ் செய்யப்பட்டு வெளிவந்தது. ஒரிஜினல் பாடலைவிட இது ரசிகர்களை மிகவும் கவர்ந்துவிட்டது. அதைவிட, இந்த பாடலுக்கு நடனமாடிய அனகாவின் க்யூட் மூவ்மெண்டுகள் ரசிகர்களை ஈர்த்துவிட்டது. இது சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவியது.

இந்நிலையில், இந்த பாடல் உருவான சிறப்பான தருணம் குறித்து ஒரிஜினல் மெட்டமைத்த இசைஞானி இளையராஜா கூறும்போது, இந்த பாடலுக்கான மெட்டை கவிஞர் வாலியிடம் சொன்னபோது, இது என்னய்யா மெட்டு, இதற்கு எப்படி பாடல் எழுதுவது என்று கேட்டாராம். அதற்கு இளையராஜா திருவள்ளுவர் எழுதிய ‘துப்பார்க்கு துப்பாய’ என்ற குறளை சுட்டிக்காட்டி அதில் உள்ள அழுத்தம் போலவே வரிகள் அமையவேண்டும் என்று சொன்னாராம். வாலியும் அதற்கு தகுந்தாற்போல் வரிகளை அமைத்துக் கொடுத்தாராம்.

இதை இளையராஜா ஒரு வீடியோவாக எடுத்து வெளியிட, சமூக வலைத்தளங்களில் இது வைரலாக பரவியது. இளையராஜா திருவாசகத்துக்கு மெட்டமைத்து பாடி உலகளவில் புகழ்பெற்றார். அதேபோல், தற்போது திருக்குறளை வைத்து ஒரு பாடலுக்கு மெட்டமைத்துள்ளார் என்று அறியும்போது அவர்மீதான ஈர்ப்பு மேலும் அதிகமாகிறது என்றுதான் சொல்லவேண்டும்.