இயக்குனர் முத்தையா இயக்கத்தில், நடிகர் கார்த்திக், அதிதி சங்கர், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரன், ஆர்.கே.சுரேஷ், வடிவுக்கரசி, சூரி, கருணாஸ், சரண்யா பொன்வண்ணன் இன்னும் பலர் நடித்து தற்பொழுது திரையரங்கில் வெளியாகியுள்ள படம் விருமன். முத்தையா படத்தில் வழக்கம் போல் தென் மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியை மையப்படுத்திய கதை தான் விருமன் படத்தின் கதை.
தந்தை பிரகாஷ்ராஜுக்கு நான்கு மகன்கள் அதில் கடைசி மகன் கார்த்திக். தந்தையின் சர்வ அதிகார போக்கினால் தாய் சரண்யா அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்கிறார். சிறுவயதிலேயே தாயை இழந்த கார்த்திக், தனது தாய் மரணத்துக்கு காரணமாக இருக்கும் தந்தை பிரகாஷ்ராஜை வில்லனாக பார்க்கின்றார். மூன்று மகன்கள் பிரகாஷ்ராஜிடம் வளர்கிறார்கள், கார்த்திக் மட்டும் அவருடைய தாய் மாமன் ராஜ்கிரனிடம் வளர்கிறார்.
இந்த படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் உள்ளது ஆனால், ஒரு சில கதாபாத்திரம் தவிர்த்து மற்ற எந்த ஒரு பாத்திரமும் நிலைத்து நிற்கவில்லை. ஏற்கனவே கார்த்திக் நடிப்பில் வெளியான கொம்பன் படத்தில் இடம்பெற்ற காட்சிகள் போன்றே பெரும்பாலான காட்சிகள் விருமன் படத்திலும் இடம்பெற்றுள்ளது. கார்த்திக் நடனம், சண்டை, நடிப்பு இது அனைத்துமே ஏற்கனவே கொம்பன் படத்தில் பார்த்தது போன்று உள்ளது.
அதேபோன்று கொம்பன் படத்தில் லட்சுமி மேனன் மற்றும் பருத்தி வீரன் படத்தில் பிரியாமணி போன்று விருமன் படத்தில் அதிதி சங்கரை பார்ப்பது போல் உள்ளது. இருந்தும் அதிதி சங்கர் நடிப்பு பாராட்டு படியாக உள்ளது. ஆர் கே சுரேஷின் வில்லனின் தோற்றம் ரசிக்கும்படியாக இல்லை. இதற்கு முன்பு முத்தையா இயக்கத்தில் வெளியான மருது படத்தில் ஆர்.கே.சுரேஷ் வில்லன் கதாபாத்திரதத்தில் மிரட்டியிருப்பார்.
ஆனால் விருமன் படத்தில் குட்டி ராஜ்கிரன் போன்று ஜிப்பா மீசை என காட்சியளிக்கிறார். சண்டை காட்சிகளில் கார்த்தியிடம் அடி வாங்கும் வில்லன்கள் சிரித்து கொண்டு சுருண்டு விழும் காட்சிகள், படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரின் கவனக்குறைவு வெளிப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாதி விட்டா போதும் என மக்கள் ஓடும் அளவுக்கு இழுத்தடிக்கப்படுகிறது. படத்தின் கதையில் மிக பெரிய குழப்பம் தெரிகிறது.
இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஒரே மாதிரியாக இருக்கிறது. ஏற்கனவே கொம்பன் பருத்திவீரன் படங்களில் பார்த்த அதே நடனம், அதே மாதிரியான இசை என அனைத்தும் ஜெராக்ஸ் காபி எடுத்தது போன்று இருக்கிறது. மேலும் ஒரே மாதிரியான படம் எடுக்கும் முத்தையாவுக்கு போர் அடிக்காமல் இருக்கலாம். ஆனால் ஒரே மாதிரியாக நடிக்கும் கார்த்திக்கு இது போர் அடிக்கவில்லையா என கேள்வி எழுந்துள்ளது.
குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என விளம்பரம் செய்யப்பட்டது, இருந்தும் படத்தில் இடம்பெற்ற சென்டிமென்ட் காட்சிகள் பார்ப்பவர்களுக்கு மனதில் ஒட்டவில்லை. மொத்தத்தில் ஒரு குறிப்பிட்ட வட்டத்தை விட்ட வெளியில் வராமல் ஒரே மாதிரியாக படம் எடுத்து வரும் இயக்குனர் முத்தையாவிடம் சரக்கு தீர்ந்து விட்டது என்பதை விருமன் படம் வெளிப்படுத்தியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த குறிப்பாக தென்மாவட்ட ரசிகர்களுக்கும் இந்த படம் சலிப்பு தட்டிவிட்டது என்பது குறிப்பிடதக்கது.