சென்னை : கடந்த சிலநாட்களாக நடிகர் மற்றும் இயக்குனரான டி.ராஜேந்தர் அவர்களின் உடல்நிலை மோசமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. அந்த தகவலை ராஜேந்தரின் மகனான சிலம்பரசன் நேற்று இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து சிலம்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எனது ஆருயிர் ரசிகர்கள் மற்றும் அன்பான பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு எனது அன்பான வணக்கம். எனது தந்தை டி.ஆருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனால் உடனடியாக அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றிற்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறினர். மேலும் அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க பரிந்துரைத்துள்ளனர். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரிலும் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டும் அவரை வெளிநாட்டுக்கு அழைத்துச்செல்ல உள்ளோம். அவர் சுயநினைவுடன் மிக நலமாக உள்ளார்.
மிகவிரைவில் சிகிச்சைகள் முடிந்து ரசிகர்கள் பத்திரிக்கை நண்பர்களை சந்திப்பார். ரசிகர்களாகிய உங்களின் பிரார்தனைகளுக்கும் அன்புக்கும் அளப்பரிய பாசத்திற்கும் நன்றி” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலேயும் சிகிச்சைக்காக டி.ராஜேந்தரை சிங்கப்பூர் அழைத்துச்செல்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திரைத்துறையில் பெண்களை தொடாமலேயே திரையில் நடித்த முதல் நாயகன் என்ற பெருமையை கொண்டவர் டி.ராஜேந்தர். அதுமட்டுமல்லாமல் தனது திரைப்படங்களுக்கு தானே இசையமைத்து ஹிட்டாக்கியதோடு பாடல்கள், இயக்கம், ஆர்ட் என பல பணிகளையும் ஒரே ஆளாக நின்று சிறப்பாக செய்துமுடிப்பதில் வல்லவர். இவருக்கென குடும்ப ரசிகர்கள் ஏராளம் என்பது குறிப்பிடத்தக்கது.